உத்தரப் பிரதேச அரசு, அம்மாநிலத்தில் தொழில்துறையை ஊக்குவிக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனால் அங்கு முதலீடுகள் குவிந்து வருகின்றன. உள்நாடு மட்டுமில்லாமல் பல வெளிநாட்டு முதலீடுகளையும் உ.பி அரசு ஈர்த்து வருகிறது. 20க்கும் மேற்பட்ட நாடுகளில் உ.பி. அரசு முதலீட்டாளர்கள் சந்திப்பை நடத்தியுள்ளது. உள்நாட்டில், மகாராஷ்டிரா, தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட பாரதத்தின் பல மாநிலங்களிலிருந்தும் புதிய முதலீடுகளை ஈர்க்க அந்தந்த மாநிலங்களிலேயே பெரிய முதலீட்டாளர்கள் மாநாடுகளையும் உ.பி. அரசு நடத்தி வருகிறது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரடியாக இதில் கவனம் செலுத்தி வருகிறார். வரும் பிப்ரவரி 10, 11 மற்றும் 12 தேதிகளில் உ.பி தலைநகர் லக்னோவில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த உ.பி அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால் வரும் ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் சுமார் ஒரு லட்சம் கோடி அளவிற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வகையில், சமீபத்தில் மகாராஷ்டிராவின் மும்பையில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி பெரிய அளவில் முதலீடுகளை திரட்டிய உ.பி அரசு, சத்தமில்லாமல், கடந்த 9, 10 தேதிகளில் தமிழகத்திலும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது. இம்மாநாட்டில் தமிழகத்தின் சிறு, குறு தொழில்முனைவோர், பெரும் தொழிலதிபர்கள் என 500 பேர் கலந்து கொண்டனர். இதில், ரூ.10,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கூறப்படுகிறது. உத்தரப் பிரதேச நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா, சமூகநலத்துறை இணை அமைச்சர் அசிம் அருண், சிறு, குறு நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் அமித் பிரசாத், தொழில்துறை செயலாளர், பலவேறு துறைகளின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரடியாக இந்த மாநாட்டை நடத்தினர்.