தமிழகத்தை தவிர்க்கும் முதலீட்டாளர்கள்

உலகின் மிகப்பெரிய ஒப்பந்த மின்னணுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான தைவான் நாட்டை சேர்ந்த பாக்ஸ்கான், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய கூட்டணி நிறுவனமாக உள்ளது. அமெரிக்கா சீனா வர்த்தக போர் காலத்தில் சீனாவில் இருந்து ஆப்பிள் தனது உற்பத்தி தளத்தை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மாற்ற முடிவு செய்தது. இந்த முடிவின் படி ஆப்பிள் பாக்ஸ்கான் கூட்டணி மட்டும் அல்லாமல் ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான உற்பத்தி கூட்டணி நிறுவனங்களும் தொழிற்சாலைகளை அமைக்க முடிவு செய்து தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. எனினும், பாக்ஸ்கான் நிறுவனம், அதற்கு முன்பாகவே சென்னை தொழிற்தசாலை மூலம் சியோமி உட்பட பல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வந்தது. இந்த சூழலில், சமீபத்தில் பாக்ஸ்கான் நிறுவனம், பாரதத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட் தயாரிக்கும் ஒப்பந்தத்தை கைப்பற்றியது. இதற்காக தனி தொழிற்சாலவையை அமைக்க முடிவு செய்து இடத்தை தேடி வந்தது. பாக்ஸ்தான் தலைவர் மற்றும் உயர்மட்ட நிர்வாக குழு பாரதம் வந்தது. பாக்ஸ்கான் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஹான் ஹை பிரிசிஷன் இண்டஸ்ட்ரி, ஐபோன் உதிரிபாகங்களுக்காக பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் சுமார் 300 ஏக்கரில் பிரம்மாண்ட தொழிற்சாலையை 700 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் அமைக்க திட்டமிட்டு வந்தது. இந்த சூழலில், பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்த 8,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டுக்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இந்த புதிய முதலீட்டின் மூலம் கர்நாடகா மாநிலத்தில் 50,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. பாக்ஸ்கான் உட்பட பல சர்வதேச நிறுவனங்கள், சமீப காலமாக தமிழகத்தை தவிர்த்துவிட்டு தெலுங்கானா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களிலும் குஜராத், மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களிலும் அதிக முதலீடுகளை செய்து வருவது சிந்திக்கத்தக்கது.