இளையான்குடி கலிபா தெருவைச் சேர்ந்தவர் முகமது ரோஸ்லான் என்ற நபர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பின் மாநிலப் பேச்சாளராக உள்ளார். இவரது வீட்டுக்கு ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ) ஆய்வாளர் விகாஸ்குமார் தலைமையிலான காவல்துறையினர் சென்றனர். அப்போது கடந்த 4 மாதங்களாக முகமது ரோஸ்லான் வீட்டுக்கு வரவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது குடும்பத்தினரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பி.எப்.ஐ நிர்வாகிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். என்.ஐ.ஏ அதிகாரிகள் வெளியேறகூறி கோஷமிட்டனர். இதையடுத்து அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், தேவையின்றி கூட்டம் கூடியதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பி.எப்.ஐ அமைப்பினர் மீது இளையான்குடி காவல்துரையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.