கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள தங்கத்தை உருக்கி அதனை வங்கியில் முதலீடு செய்து, அதில் இருந்து கிடைக்கும் வட்டியை அக்கோவில் திருப்பணிக்கு பயன்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த ஜூன் மாதத்தில் இருக்கன்குடி, மாரியம்மன் திருக்கோயிலின் ரூ.10 கோடி மதிப்பீட்டிலான தங்கத்தை உருக்கி அதை தங்க முதலீட்டுப் பத்திரமாக மாற்றி கோயில் நிர்வாகிகளிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதேபோல இரு தினங்களுக்கு முன், பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் பக்தர்கள் செலுத்திய 130 கிலோ தங்கத்தை உருக்கி, பாரத ஸ்டேட் வங்கி அதிகாரியிடம் ஒப்படைத்து அதனை வைப்பு நிதியாக்க ஒப்படைத்தார் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய தங்கத்தை உருக்கக்கூடாது என்பதே ஹிந்துக்களின் கோரிக்கையாக தொடர் உள்ளது. எனினும், அதனை மீறியே தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு செயல்படுகிறது. சரி, அப்படியே உருக்கி வங்கியில் முதலீடு செய்யும்போது அதற்கான வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பது யாருக்கும் தெரிவதில்லை. மேலும், கற்கள் பிரித்து எடுத்த பிறகு 130 கிலோ தங்கம் கிடைத்ததாக கூறியுள்ளார் அமைச்சர். அவை வெறும் கற்களா அல்லது, வைரம் வைடூரியம் போன்ற விலை உயர்ந்த ரத்தினக் கற்களா, அவை மதிப்பு மிக்க பழமையான ஆபரணங்களா அல்லது புதியவையா, விலை மதிப்பற்ற கற்கள் இருந்திருந்தால் அவைகள் இப்போது யாருடைய மேற்பார்வையில் பாதுகக்கப்படுகிறது, நகைகள் மதிப்பிடப்படும்போதும் கற்கள் பிரித்தெடுக்கும்போதும் அவற்றை அளவிடும்போதும் உருக்கப்படும்போதும் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா, இந்த செயல்பாடுகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டதா, ஆய்வுக்காக அந்த வீடியோக்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் அரசு வெளிப்படையாக தெரிவிக்கலாமே? மேலும், இந்த செயல்முறைகளை அரசு,நேரடி ஒளிபரப்பு செய்வது அல்லது இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது போன்ற நேர்மறையான வெளிப்படையான செயல்பாடுகளை முயற்சித்தால் அது அரசின் மெதான நம்பிக்கையை வளர்க்கும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.