நாம் அன்றாடம் பயன்படுத்தும் பணம் பேப்பர் வடிவிலும், உலோக நாணயம் வடிவிலும் உள்ளது. தொழில் நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் டிஜிட்டல் கோட்கள் மூலம் உருவாக்கப்படும் டிஜிட்டல் நாணயங்கள் அல்லது டிஜிட்டல் கரன்சியும் வெளியாகி வருகின்றன. இவற்றை அரசு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் தயாரித்து வருகின்றன. காகித பணத்திற்குச் சமமாக இந்த டிஜிட்டல் பணமும் மதிக்கப்படுகிறது என்றாலும், உலக நாடுகளின் அரசுகளால் அங்கீகரிக்கப்படாத தனியாரின் டிஜிட்டல் கரன்சிகளில் ஆபத்துகளும் அதிகம். காகித பணத்திற்குச் சமமாக இந்த டிஜிட்டல் பணமும் மதிக்கப்படுகிறது. இந்த தனியார் நாணயங்களை மிக சில நாடுகள் மட்டுமே அங்கீகரித்துள்ளன.
இந்த சூழலில், பாரதத்தில் ரூபாய்க்கு இணையான டிஜிட்டல் நாணயங்களை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும் என மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அதன்படி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாரதத்தின் டிஜிட்டல் நாணயங்களை, நாடு முழுவதும் சோதனை முறையில் நேற்று ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. ந்த மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC), பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எஸ்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, கோடக் மகேந்திரா, யெஸ் வங்கி, ஐ.டி.எப்.சி பர்ஸ்ட் வங்கி, எஸ்.எஸ்.பி.சி வங்கி ஆகிய 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாணயம் அடுத்த ஒரு மாதத்திற்குள் முழு பயன்பாட்டிற்கு வரும். அரசு பத்திரங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனை பயன்பாட்டிற்கு இந்த டிஜிட்டல் நாணயத்தை பயன்படுத்தலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் ரூபாயில் ரூபாய்க்கு எப்படி ₹ என்ற குறியீடு உள்ளதோ அதேபோல் டிஜிட்டல் ரூபாய் e₹ என்ற குறியீடும் மொத்த விலை விற்பனை சந்தையில் பயன்படுத்தும் டிஜிட்டல் ரூபாய்க்கு e₹ W என்றும் சில்லறை விற்பனை சந்தையில் பயன்படுத்தும் டிஜிட்டல் ரூபாய்க்கு e₹ R என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் ரூபாய் பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒவ்வொரு பரிமாற்றமும் டிஜிட்டல் லெட்ஜரில் சேமிக்கப்பட்டு வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கிகளுக்கிடையே மட்டும் பகிரப்படும். இதை யாராலும் அழிக்க முடியாது, யாரும் இதனை எளிதில் ஹேக் செய்யவும் முடியாது. டிஜிட்டல் ரூபாயை எந்தத் தனிநபராலும் உருவாக்க முடியாது. டிஜிட்டல் ரூபாய் ரிசர்வ் வங்கி தலைமையில் நிர்வாகம் செய்யப்படும். இதில் பயன்படுத்தப்படும் கிரிப்டோகிராபி தொழில்நுட்பம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
டிஜிட்டல் பணம் எங்கு, யாரிடம் இருக்கிறது, எவ்வளவு இருக்கிறது, குறிப்பிட்ட பணம் யாரிடம் இருந்து வந்தது என்பது போன்ற அனைத்து விஷயங்களையும் ரிசர்வ் வங்கி அறிந்துகொள்ள முடியும். இதனால் டிஜிட்டல் ரூபாய் மூலம் கள்ள நோட்டு, கருப்புப் பணம் போன்றவற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். மேலும், பணப் பரிமாற்றத்தில் இருக்கும் செலவுகள் முற்றிலுமாக நீக்கமுடியும். டிஜிட்டல் ரூபாய்க் கொண்டு உலகளாவிய பணப் பரிமாற்றத்தை நொடிப் பொழுதில் பாதுகாப்பாக மேற்கொள்ள முடியும் என்பது உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் உண்டு.