இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல்; கனடாவுக்கு மத்திய அரசு அழுத்தம்

வட அமெரிக்க நாடான கனடாவின் வான்கூவர் நகரில், சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் சர்ரே என்ற பகுதியில், கடந்த ஜூன் 19ம் தேதி, காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை, அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர். இவர் மீது, நம் நாட்டில் பல்வேறு அடிதடி, கொள்ளை வழக்குகள் இருந்த நிலையில், இவர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடனும் தொடர்பு வைத்திருந்தார்.

இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மரணத்திற்கு நீதி கேட்டு, எதிர்வரும் 8ம் தேதி, டொரன்டோ, வான்கூவரில் உள்ள நம் நாட்டு துாதரகங்களை நோக்கி போராட்டம் நடத்த, காலிஸ்தான் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள் போஸ்டர் அடித்துள்ளனர். அதில், நம் நாட்டு துாதரக அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களோடு, அவர்களை மிரட்டும் வகையில் வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும், இந்தப் போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களின் மொபைல் எண்களும் போஸ்டரில் அச்சடிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, இந்திய துாதரக அதிகாரிகளை குறிவைத்துள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது, பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கும்படி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை மத்திய அரசு கேட்டுள்ளது. இது தொடர்பாக, அவரை நேரில் சந்தித்தும் நம் துாதரக அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இதற்கிடையே, டொரன்டோ, வான்கூவரில் உள்ள நம் நாட்டு துாதரகங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களை ஒடுக்கும்படி, மத்திய அரசு பல முறை வலியுறுத்திய போதும், ஓட்டு வங்கிக்காக, அவர்கள் மீது, அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.