ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து, பாரதம், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் சர்வதேச கூட்டணி, சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்களை கட்டாய தொழிலாளர்களாக கொண்டு செயல்படும் நிறுவனங்கள், அதில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள், கடன் கொடுத்துள்ள வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டாய உழைப்பைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் தங்களது நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும். தங்களது வங்கிகள் அவற்றில் முதலீடு செய்வதைத் தடுக்க வேண்டும் என அனைத்து நாடுகளின் அரசுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதே காரணங்களுக்காக 2020ல் அமெரிக்க கருவூலத் துறையால் தடைசெய்யப்பட்ட ஜின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமான நிறுவனமான XPCC நிறுவனத்தில் HSBC வங்கி பங்குகளை வைத்திருக்கும் செய்திகள் வெளியானதையடுத்து இந்த கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன. XPCC நிறுவனம், சீன அரசால் இயக்கப்படும் துணை ராணுவக் குழுமம் ஆகும். உய்குர் முஸ்லிம்களை கட்டாய தொழிலாளர்களாக பரிமாற்றம் செய்யும் திட்டங்களை இது செயல்படுத்துகிறது. இங்கு குறைந்தபட்சமாக 10 லட்சம் உய்குர்கள் தடுத்து வைக்கப்பட்டு துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகியுள்ளனர். கட்டாய உழைப்பு, சித்திரவதை, பாலியல் துஷ்பிரயோகம் போன்றவைகள் இங்கு நடைபெறுகிறது என IPAC அறிக்கை கூறுகிறது.