கனடாவில் சர்வதேச கீதா மஹோத்சவ் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை வாழ்த்தி பேசிய ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோரின் செய்திகள் வீடியோவில் ஒலிபரப்பப்பட்டது. அதில் பேசிய மனோகர் லால் கட்டார், “பிரதமர் நரேந்திர மோடியின் உத்வேகத்துடன், 2016 முதல் நாங்கள் சர்வதேச அளவில் கீதா மஹோத்சவத்தைக் கொண்டாடுகிறோம்” என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கனடா நாடாளுமன்ற உறுப்பினர் நேபியன் சந்திரா ஆர்யா பேசுகையில், “நவம்பரை ஹிந்து பாரம்பரிய மாதமாக கொண்டாடுவதற்கான தனது தனிப்பட்ட உறுப்பினர் மசோதாவை வலியுறுத்தினார். கனடாவின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு ஹிந்து கனேடியர்கள் ஆற்றிய பங்களிப்புகளையும் கனேடிய சமூகத்திற்கான அவர்களின் சேவைகளையும் கனடா அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும்” என்று கூறினார்.
இந்த நிகழ்வு குறித்து பாரத் சேவாஷ்ரம் சங்க கனடா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கனடா நாடாளுமன்றத்தில் கீதா மஹோத்ஸவ் செப்டம்பர் 16 முதல் 18 வரை கொண்டாடப்பட்டது. இந்த விழா மிசிசாகாவில் உள்ள வாழும் கலை மையத்தில் இரண்டாவது நாள் கொண்டாடப்பட்டது. மூன்றாம் நாள் டொராண்டோவில் உள்ள யோங்கே டுண்டாஸ் சதுக்கத்தில் ஷோபா யாத்திரை அணிவகுப்புடன் இது முடிவடைந்தது.
கனடாவின் மனநல ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, சர்வதேச தியான அறக்கட்டளையின் தலைவர் சுவாமி அத்வைதானந்த கிரி பேசுகையில், “32.3 சதவீத மக்கள் கவலை அல்லது மனச்சோர்வு போன்ற கடுமையான மனநலப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளனர், 97 சதவீதம் பேர் மக்கள் சோகத்தை அனுபவித்து வருகிறார்கள் என்றால் அது ஒரு தீவிரமான கேள்வியை எழுப்புகிறது. அதற்கு உடனடியாக தீர்வு தேவைப்படுகிறது. இந்த பிரச்சனையை சரிசெய்வது அவசியம். நமது வாழ்க்கையில் பகவத் கீதைதான் அதற்கான சரியான தீர்வாகும். மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் அவரவர் வழியைப் பின்பற்றுகிறார்கள், அதுவே அவர்களுக்கானத் தீர்வு” என கூறினார்.