கேரளாவில் அதானி துறைமுகத்திற்கு எதிராக நடைபெறும் திட்டமிடப்பட்ட போராட்டங்களுக்கு வெளிநாட்டு நிதியுதவிகள் கிடைப்பது குறித்த கணிசமான ஆதாரங்களை மத்திய உளவுத்துறை (ஐ.பி) சேகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துறைமுகம் அமைக்க உயர் நீதிமன்றத் தீர்ப்பு, காவல்துறை நடவடிக்கைகள், மாநில அரசின் ஒப்புதல், நிர்வாக ரீதியான ஒப்புதல்கள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தொடரும் இந்த போராட்டம், விழிஞ்சத்தையும் கேரள மாநிலத்தையும் நாசப்படுத்தும் நோக்கத்தில் இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கடலோரப் பகுதியில் உள்ள 10 தன்னார்வ அமைப்புகளில் சந்தேகத்தின் பேரில் ஐ.பி விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும், சில நிறுவனங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்களின் வங்கிக் கணக்குகளை சரிபார்த்து வருகிறது. சிலர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். விழிஞ்சம், முதலப்பொழி உள்ளிட்ட பகுதிகளில் ரகசிய கண்காணிப்புகள், விசாரணைகள் நடைபெறுகிறது. போராட்ட இடத்திற்கு வருபவர்கள், அவர்கள் பேசும் பேச்சுக்களை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். சந்தேகப்படும்படியான நபர்களின் படங்களையும் தகவல்களையும் திரட்டி வருகின்றனர் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துறைமுகம் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியபோது இந்த போராட்டம் தொடங்கியது. போராட்டத்திற்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் திருவனந்தபுரம் வர்த்தக மற்றும் தொழில் சங்கத் தலைவர் எஸ்.என்.ரகுச்சந்திரன் நாயர் அளித்த புகாரின் அடிப்படையில் ஐ.பி இந்த தகவல் சேகரிப்பை துவங்கியுள்ளது. இந்த போராட்டத்தின் பின்னணியில், துபாய், இலங்கை, சீனா போன்ற நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு சக்திகள் இருப்பதாக ரகுச்சந்திரன் நாயர் தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், போராட்ட களத்தில் பேசப்பட்ட வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் பல்வேறு ஆவணங்களையும் புகாருடன் இணைத்துள்ளார். இந்த போராட்டம் தேசிய நலனுக்கு எதிரானது என்பதால் உள்துறை அமைச்சகம் இந்த போராட்டத்தை மிகவும் தீவிரமாக எடுத்து வருகிறது.