தேசியக் கொடியை அவமதித்து பதிவு: திமுக.,வை சேர்ந்தவர் மீது வழக்கு

மத்திய பிரதேசத்தில் பழங்குடி இளைஞர் மீது போதை நபர் சிறுநீர் கழித்த வீடியோ கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்பிரச்னையை அரசியலாக்கும் வகையில் தமிழகத்தை சேர்ந்த ஷபீக் என்ற நபர், சிறுநீர் கழித்த படத்தை தேசியக் கொடியுடன் இணைத்து “பா.ஜ.,வின் புதிய இந்தியா” என பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதனையடுத்து ம.பி., போலீசார் ‘ஷபீக் 2.0’ என்ற ஐ.டி வைத்திருக்கும் அந்த நபர் மீது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், மோசடி செய்தல், தேசிய கவுரத்திற்கு அவமதிப்பு ஏற்படுவதை தடுக்கும் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர். ஷபீக் என்ற அந்நபர் தன் சுய விபரக் குறிப்பில் ‘திரவிடியன் ஸ்டாக்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் தொடர்ந்து திமுக சார்ந்தும், பா.ஜ.,வுக்கு எதிராகவும் கருத்து பதிவிட்டு வந்துள்ளார். இதனால் அவர் திமுக.,வை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.