தேசத்தின் 75வது சுதந்திர தின விழா, அமுதப் பெருவிழாவாக தேசம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். பொதுமக்கள் வீடுகளில் கொடியேற்ற வசதியாக 25 ரூபாய்க்கு தபால் நிலையங்கள் மூலம் மத்திய அரசு தேசியக்கொடியை விற்பனை செய்தது. 30 கோடிக்கும் அதிகமான தேசியக்கொடிகள் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் பஜன்புரா பகுதியில் வசிக்கும் ஒரு நபர், தேசியக்கொடியை வைத்து ஒருவர் தனது டூவீலரை துடைத்து அவமரியாதை செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது அந்த நபர், தான் இதனை வேண்டுமென்றே செய்யவில்லை, தவறுதலாக நடந்துவிட்டது என கூறியுள்ளார். காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேசியக்கொடியை அவமதித்தற்காக அவர் கைது செய்யப்படலாம். தேசியக்கொடியை அனைவரும் அவரவர் இல்லங்களில் மூன்று நாட்கள் ஏற்ற மத்திய அரசு ஊக்குவித்து, சலுகை விலையில் தேசியக்கொடியை வழங்குவது தேசப்பற்றை வளர்க்கவேயன்றி அளிக்கப்பட்ட சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதற்காக அல்ல. தமிழகத்தின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி ஏற்றிய தேசியக்கொடிகள் இன்றுவரை அகற்றப்படாமல் அப்படியே உள்ளதை நாம் பார்க்க முடிகிறது. இது தவறான செயல். நமது தேசியக்கொடிக்கு உரிய மரியாதையை நாம் ஒவ்வொருவரும் அளிக்க வேண்டும். அவற்றை பாதுகாப்பாக அகற்றி பத்திரப்படுத்த வேண்டும். கிழிந்துவிட்ட தேசியக்கொடிகளை அரசு கூறியுள்ள முறையில் அப்புறப்படுத்துவது அவசியம்.