பாகிஸ்தானில் ஹிந்துக்கள் மீதான அட்டூழியங்கள் தொடர்பான மற்றொரு வழக்கில், பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பவல்பூரில் வசிக்கும் கூலி வேலை செய்யும் ஒரு ஹிந்து பெண்மணி தனது பணிக்கான கூலியை பெற சென்றபோது, முஸ்லீம் நில உரிமையாளரான முகமது அக்ரம் என்பவரால் தலைகீழாகத் தொங்கவிட்டு அடித்து சித்திரவதை செய்யப்பட்டார். மேலும், முகமது அக்ரம் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, முகமது அக்ரம், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை மறைக்க முயன்றார். வழக்கை திசைதிருப்பும் விதத்தில் அந்த பெண் மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு உரிய சிகிச்சையும் மருத்துவச் சான்றிதழும் வழங்க மறுக்கப்பட்டது. இந்த விஷயம் பகிரங்கமானதால் அங்குள்ள ஹிந்து சமூகத்தினர் தெருக்களில் திரண்டு போராட்டம் நடத்தினர். பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் அடிக்கடி வெறுப்பு, கடத்தல், கற்பழிப்பு, கட்டாயத் திருமணம் மற்றும் கொலை ஆகியவற்றுக்கு ஆளாகிறார்கள். சிறுபான்மையினர் உரிமைகளுக்கான மக்கள் ஆணையம் மற்றும் சமூக நீதிக்கான மையம் ஆகியவற்றின் தரவுகளின்படி, 2013 மற்றும் 2019க்கு இடையில் 156 கட்டாய மதமாற்ற வழக்குகள் உள்ளன. பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்களுக்கு நீதி வழங்க பாகிஸ்தான் நீதிமன்றங்கள் தொடர்ந்து தவறி வருகின்றன. பல வழக்குகளில் ஹிந்து மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினரை கடத்தி வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்தவர்களுக்கு நீதிபதிகள் விலக்கு அளித்துள்ளனர். குற்றவாளிகள் இப்படி நீதிமன்றத் தடைகள், செல்வாக்கு மிக்க சமூக, அரசியல் தலைவர்களின் ஆதரவையும் அனுபவித்து வருவதால் பாக்கிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் தோர் துன்புறுத்தல்களை அனுபவித்து வருகின்றனர்.