நீலகிரி மாவட்டம் கூடலூரில், டேன்டீ தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பதற்காக தமிழக பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசுகையில், “கூடலூர் என்பது தி.மு.கவின் கோட்டை, கூடலூர் மக்கள் பா.ஜ.கவுக்கு இதுவரை வாக்களிக்கவில்லை என்று சொல்வார்கள். ஆனால், இங்கு வந்து பார்த்திலிருந்து, இனி எப்போது தேர்தல் வந்தாலும் இது பா.ஜக.வின் கோட்டையாக மாறும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. இதன்மூலம் பா.ஜ.க மீது மக்களுக்கு நம்பிக்கை வந்திருப்பதை காணமுடிகிறது. தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வேலைக்கு சென்று பிறகு குடியுரிமை பறிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட தமிழர்கள், பாரதம் திரும்பிய தமிழர்களுக்கு அவர்களுக்கு குடியுரிமை வழங்கி வேலை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் டேன்டீ நிறுவனம். இந்நிறுவனத்தை மூடப்போவதாக தமிழக அரசு ஒரு சமிக்ஞை கொடுத்துள்ளது. கிட்டத்தட்ட டேன்டீக்கு கீழ் வரக்கூடிய 5,315 ஏக்கரில் தேயிலை விளைச்சல் குறைவாக இருக்கிறது. நிலங்களின் தன்மை மாறியிருக்கிறது. எனவே இந்த இடத்தை வனத்துறை வசம் ஒப்படைக்க அரசாணை பிறப்பித்து வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இது இரண்டாவது முறையாக இழைக்கப்பட்டுள்ள அநீதி. 1948ல் இலங்கை அரசு இழைத்த அநீதியை போல 2022ல் தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது அநீதியை இழைத்திருக்கிறார். 700 பேர் வேலை இழந்துவிட்டார்கள். அவர்களை மிரட்டி கட்டாய ஓய்வு பெற வேண்டும் என்று மாநில அரசு கூறுகிறது. தேயிலைத் தோட்ட குடியிருப்புகளில் இருந்து வெளியேறாதவர்கள் வீடுகளில், 15 நாட்களில் வீட்டை காலி செய்யும்படி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் பாரத வம்சாவழியைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் இன்னமும் அங்கே பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். அதனால்தான், பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வசிக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் வீடுகளைக் கட்டித்தந்தார். வடக்குப் பகுதியில் இருக்கின்ற தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டித்தந்தார். தமிழர்களுக்கு இதையெல்லாம் செய்துவிட்டுதான் நாங்கள் பேசுகிறோம். பேசுவதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது. எழுத்துப்பூர்வமாக தமிழக முதல்வர் டேன்டீ எங்களுக்கு வேண்டாம். இந்த 5315 ஏக்கரை மத்திய அரசே எடுத்துக் கொள்ளுங்கள், மத்திய அரசே இந்த நிறவனத்தை நடத்துங்கள் என்று எழுதி தந்தால், நாங்கள் தயார். டேன்டீயை மத்திய அரசு எடுத்து நடத்துவதற்கு நாங்கள் தயார். இலங்கையிலிருந்து தமிழகம் வந்த பாரத வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக திராவிடக் கட்சிகள் நடத்துகின்றனர். ஆனால் பிரதமர் இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு 60 ஆயிரம் வீடுகளைக் கட்டி கொடுத்துள்ளார்” என்று பேசினார்.