கணினி உள்ளிட்ட நவீன தொழில் நுட்பத் துறைகளில் பணிபுரியும், ஊழியர்கள், தாங்கள் பணிபுரியும் நிறுவனத்துக்குத் தெரியாமல், அதிக வருமானத்திற்காக வேறு சில நிறுவனங்களிலும் வேலை செய்வது ‘மூன்லைட்டிங்’ என அழைக்கப்படுகிறது. இந்த மூன்லைட்டிங் கலாச்சாரம் என்பது சமீப காலமாக விவாத பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் விப்ரோ நிறுவனம், இத்தகைய மூன்லைட்டிங் பணியாளர்கள் 300 பேரை கண்டறிந்து பணி நீக்கம் செய்தது. இந்நிலையில் தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனமும், கடந்த 12 மாதங்களில் இரட்டை வேலை செய்து வந்த ஊழியர்களை கண்டறிந்து பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஊழியர்கள் இரண்டு நிறுவனங்களில் பணி புரிவதால் நிறுவனத்தின் ரகசியத் தன்மை, தரவு பாதுகாப்பு உள்ளிட்ட அச்சம் காரணமாக இந்த பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும், எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறித்தான விவரங்கள் வெளியிடப்படவில்லை.