இடதுசாரி பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) அமைப்பின் 18வது ஆண்டு விழாவையொட்டி அதன் மத்திய குழு சார்பில் 21 பக்க அறிக்கை அதன் நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு சமீபத்தில் அனுப்பப்பட்டது. அதில், “கடந்த ஓராண்டில் எதிரிகளின் (பாதுகாப்பு படைகள்) தாக்குதலால் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் அகிராஜு ராஜகோபால் உள்ளிட்ட 124 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்துள்ளனர். பல புதிய பிரிவுகளை உருவாக்கி பயிற்சி அளித்து வருகிறோம். அவர்கள் மக்களுக்கு பயிற்சி அளித்து போருக்கு தயார் செய்வார்கள். விவசாயிகள் போராட்டத்தில் நாம் பங்கேற்றோம். டெல்லியிலும் நாட்டின் இதர பகுதிகளில் நடைபெற்ற சி.ஏ.ஏ, விவசாய சட்ட எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் நமது போராளிகள் போரிட்டனர். இதன் காரணமாக 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறப்பட்டது. அக்னி பாதை திட்டத்துக்கு எதிரான போராட்டங்களிலும் நமது போராளிகள் முக்கிய பங்கு வகித்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஒரு காவல்துறை உயர் அதிகாரி, இத்தகைய பயங்கரவாதிகள் பெரும்பாலும் மலைப்பகுதி கிராமங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். தற்போது இவர்கள் நகர பகுதிகளையும் குறிவைத்துள்ளனர்” என்றார்.