பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்னை வந்திருந்தார். நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற ‘செஸ்’ ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று தங்கினார். மறுநாள் அண்ணா பல்கலைக் கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். பல்கலைக் கழகத்தின் வேந்தரான கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல். முருகன், துணைவேந்தர் வேல்ராஜ் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். விழாவில் பல்கலைக் கழக அளவில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி படிப்புகளில் முதலிடம் பெற்ற 69 மாணவ மாணவிகளுக்கு பிரதமர் மோடி தங்கப் பதக்கங்களை வழங்கினார். அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் சுதந்திர பாரதத்தின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவுக்கு பிறகு 70 ஆண்டுக்கு பின் முதல் முறையாக பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்று பதக்கங்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாளைய தலைவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. பாரதத்தின் இளைய சமூகத்தை உலகம் உற்று நோக்குகிறது. மின்னணு பொருட்கள் உற்பத்தியில் உலகிலேயே பாரதம் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலக அளவில் வாய்ப்புகளை உருவாக்கும் நாடாக பாரதம் மாறியுள்ளது. இங்கு தற்போது தொழில்முனைவோர் அதிகளவில் உருவாகி வருகின்றனர். ‘ரிஸ்க்’ எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீங்கள் ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டும்; இல்லாவிட்டால் உங்களுக்கான வாய்ப்பை இழந்துவிடுவீர்கள். வலிமையான அரசு தொழில் முனைவோராக விரும்புவர்களுக்கு செவி சாய்க்கிறது, உதவுகிறது. சூழலுக்கேற்ப முடிவுகளை எடுக்கவும், படிப்புகளை தேர்வு செய்யவும் தேசிய கல்விக் கொள்கை உதவுகிறது’ என கூறினார்.