டெல்லியில் மத்திய பொதுப் பணித்துறையின்(சி.பி.டபிள்யூ.டி) 168வது ஆண்டு தின கொண்டாட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ‘பாரதம் நகர்ப்புற மறுமலர்ச்சியைக் காண்கிறது. குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் இதர பல நினைவுச் சின்னங்களின் கட்டடக்கலை அற்புதங்களும் சுதந்திரத்திற்கு முந்தைய பாரத கட்டடக்கலை நிபுணத்துவத்திற்கு சான்றுகளாக விளங்குகின்றன. கடந்த பல ஆண்டுகளாக மிக முக்கியமான பொதுப்பணிகளை சி.பி.டபிள்யூ.டி மேற்கொண்டு கட்டுமான நிர்வாகத்துறையில் முன்னணி அமைப்பாக மாறியுள்ளது. அரசு நிர்வாகத்திற்கான முக்கியப் பங்களிப்பை இந்தத் துறை செய்துவருகிறது. நாடாளுமன்றத்தை புதிதாக அமைக்கும் திட்டம், குடியரசு துணைத் தலைவர் இல்லம், பொதுவான மத்திய செயலகம் போன்றவை சி.பி.டபிள்யூ.டி-யின் நல்ல பணிகளாகும். தேச எல்லைகளைக் கடந்தும் இதன் பணி விரிவடைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் சி.பி.டபிள்யூ.டியால் கட்டப்பட்டுள்ளது. தற்போது கட்டுமானங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு என்ற அளவில் இல்லாமல், அடுத்த 250 ஆண்டுகளுக்காக கட்டப்படுகின்றன. எனவே, இவற்றில் ஏற்படும் குறைபாடுகள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தேசத்தை கட்டமைப்பதில் உறுதிப்பாட்டையும், பொறுப்புணர்வையும் கொண்டிருக்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.