ஜெர்மனியுடன் நீர் மூழ்கிக் கப்பல்களை உருவாக்க பாரத பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒப்பந்தம்

இந்தியா அதன் கடற்படையை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்திய கடற்படைக்கு தேவையான 6 நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு 5.2 பில்லியன் டாலர் (ரூ.42,500 கோடி) மதிப்பில் ஜெர்மனியுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்ய உள்ளது.

இதுதொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ள ஜெர்மனியின் பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார்.

சீனாவுடன் எல்லைப் பிரச்சினை தொடர்ந்து வருகிற நிலையில், பாரதம் தன்னுடைய ராணுவக் கட்டமைப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடற்படையை நவீனப்படுத்தி விரிவாக்க வேண்டிய சூழலில் பாரதம் உள்ளது. இந்நிலையில், 5.2 பில்லியன் டாலர் மதிப்பில் நவீனரக நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க ஜெர்மனியுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது. இது தொடர்பான முதற்கட்ட ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டில் தயாரிப்பு

இந்த ஒப்பந்தம் நிறைவேறும்பட்சத்தில், இந்திய பொதுத் துறை நிறுவனமான மசாகன் கப்பல்கட்டும் நிறுவனமும் ஜெர்மனியின் தைசென்க்ரூப் நிறுவனமும் இணைந்து இந்தியாவிலேயே 6 நீர் மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.