உலகெங்கிலும் உள்ள பனிப்பாறைகள் புவி வெப்பமயமாதல் காரணத்தால் மிகவும் ஆபத்தான வேகத்தில் உருகி வருகின்றன. இமயமலையும் விதிவிலக்கல்ல. பாரதிய வாழ்க்கைச் சூழலில் இமயமலை பனிப்பாறைகள் மிக முக்கியமானவை. குறிப்பாக இந்த வற்றாத நதிகளை தங்கள் அன்றாட நீர் தேவைகளுக்கு நம்பியிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரம். புவி வெப்பமடைதலால் வேகமாக உருகி வரும் இந்த பனிப்பாறைகள் வருங்காலத்தில் இந்த முக்கிய நீர் ஆதாரங்களின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். இதற்கு நேர்மாறாக, இமயமலைப் பகுதியில் உள்ள காரகோரம் மலைத்தொடரில், மத்திய காரகோரத்தின் பனிப்பாறைகள் கடந்த சில தசாப்தங்களில் வியக்கத்தக்க வகையில் மாறாமல் உள்ளதுடன் சிறிதளவு அதிகரித்துள்ளது. இந்த விசித்திர நடத்தை குன்லூன் பகுதியை சுற்றியுள்ள மிகவும் சிறிய பிராந்தியத்தில் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது. இந்த நிகழ்வு பனிப்பாறை நிபுணர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
போபால் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் பங்கஜ் குமார், ஆகிப் ஜாவேத் உள்ளிட்டோர் அடங்கிய ஆய்வுக்குழு இதனை ஆய்வு செய்தது. இந்த ஆய்வுக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் காலநிலை மாற்றத் திட்டம் ஆதரவு அளித்துள்ளது. தற்போது இந்த விஞ்ஞானிகள் குழு, 21ஆம் நூற்றாண்டில் வானிலையில் ஏற்பட்டுள்ள சமீபகால மேற்கத்திய இடையூறுகளின் மறுமலர்ச்சியே காரகோரத்தில் இத்தகைய ஒழுங்கின்மையைத் தூண்டுவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் கருவியாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மேலும், குளிர்காலத்தில் இப்பகுதியின் பனிப்பொழிவின் முதன்மை காரணமாக இந்த மாற்றங்கள் உள்ளன. அவை மொத்த பருவகால பனிப்பொழிவு அளவின் 65 சதவீதமாகவும், மொத்த பருவகால மழைப்பொழிவில் 53 சதவீதமாகவும் இருப்பதால், ஈரப்பதத்தின் மிக முக்கியமான ஆதாரமாக அமைகின்றன. இதற்கு அங்குள்ள மழைப்பொழிவு, பனிப்பொழிவுகள் சுமார் 27 சதவீதம் அதிகரித்துள்ளதும் ஒரு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளனர். அமெரிக்க வானிலை சங்கத்தின் காலநிலை இதழில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.