இந்திய வங்கிகள் செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் சுமார் 60,000 கோடி ரூபாய் லாபம் ஈட்டி வரலாறு காணாத சாதனையைப் படைத்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இந்திய வங்கிகளின் நிகர லாபம் 37,567 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 59 சதவீதம் அதிக லாபத்தைப் பெற்றுள்ளது. தனியார் வங்கிகள் இணைந்து இந்தச் செப்டம்பர் காலாண்டில் 33,165 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன. இது முந்தைய ஆண்டில் ரூ.19,868 கோடியை விட 67 சதவீதம் அதிகமாகும். பொதுத்துறை வங்கிகள் கடந்த நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் 17,123 கோடி ரூபாயை லாமாகப் ஈட்டிய நிலையில் தற்போது 25,685 கோடி ரூபாயை லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது சுமார் 50 சதவீத வளர்ச்சியாகும். பாரதத்தின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பொதுத்துறை வங்கி பிரிவின் லாபத்தில் 50 சதவீதத்திற்கு மேல் ஈட்டியுள்ளது. மேலும், வரலாறு காணாத அதிகபட்ச காலாண்டு லாபமான ரூ. 13,256 கோடியை பெற்றுள்ளது ஸ்டேட் வங்கி. இது முந்தைய ஆண்டை விட 74 சதவீதம் அதிகமாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த பொதுத்துறை வங்கிகளின் சாதனை செயல்திறன் குறித்து ட்வீட் செய்திருந்தார், அதில் செயல்படாத சொத்துக்களை (என்.பி.ஏ) குறைப்பதற்கும், வங்கிகளின் மேம்படுத்தும் அரசின் தொடர் முயற்சிகளுமே பொதுத்துறை வங்கிகளின் லாபம் உயர்வுக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.