பாரதம் காத்திருக்கும்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இரண்டு நாள் இந்தோ பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் (ஐ.பி.இ.எப்) அமைச்சர்கள் கூட்டத்தின் முடிவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஐ.பி.இ.எப்பில் வர்த்தகப் பாதையில் பாரதம் தொடர்ந்து ஈடுபடும். ஆனால், அதற்கு முன் இந்த வர்த்தக கூட்டமைப்பில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் வரை பாரதம் காத்திருக்கும். அனைத்து நாடுகளிடையேயும் பரந்த ஒருமித்த கருத்து இன்னும் வெளிவரவில்லை, சுற்றுச்சூழல், தொழிலாளர் மற்றும் பொது கொள்முதல் போன்ற சில விஷயங்களில் பரந்த ஒருமித்த கருத்து இதுவரை வெளிவரவில்லை என்று கூறினார். ஐ.பி.இ.எப் ஆனது அமெரிக்கா மற்றும் இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் மற்ற நட்பு நாடுகளால் கூட்டாக மே 23 அன்று டோக்கியோவில் தொடங்கப்பட்டது. 14 ஐ.பி.இ.எப் நாடுகள், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்தையும், உலகளாவிய பொருட்கள் மற்றும் சேவை வர்த்தகத்தில் 28 சதவீதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. வர்த்தகம், விநியோகச் சங்கிலிகள், சுத்தமான பொருளாதாரம் மற்றும் நியாயமான பொருளாதாரம் என்ற நான்கு அடிப்படை கொள்கைகளைச் சுற்றி இந்த அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது.