பாரதம் 7 சதவீதம் வளர்ச்சியடையும்

பிரபல பொருளாதார நிபுணரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினருமான சஞ்சீவ் சன்யால், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “உலகின் பல நாடுகள் மெதுவான பொருளாதார வளர்ச்சியை எதிர்கொள்ளும் அல்லது மந்த நிலையை அடையும். இதற்கு கடுமையான பணக்கொள்கைகள், எரிசக்திக்கு அதிகப்படியான விலை, உக்ரைன் ரஷ்ய போர் என பல காரணங்கள் உள்ளன. இத்தகைய சூழ்நிலைகளிலும் பாரதம் நன்றாக செயல்பட்டு 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்து உலகில் வலுவான பொருளாதார நாடாக தனித்து நிற்கும். மத்திய அரசு பல ஆண்டுகளாக செய்துவரும் வினியோக சீர்திருத்தங்களின் ஒட்டுமொத்த தாக்கம் காரணமாக, பாரதத்தின் பொருளாதாரம் முன்பைவிட மிகவும் நெகிழ்வானதாகவும், மீள்தன்மையுடனும் உள்ளது. ஒருவேளை 2003ல் இருந்து 2007 வரையில் இருந்த உலகளாவிய பொருளாதார சூழல், பணவீக்கம், போன்றவை இப்போது அமைந்தால், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது 9 சதவீத அளவைகூட எட்ட முடியும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு சூழல் இல்லை. இப்போதுள்ள மோசமான சூழலிலும் நாம் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டிப்பிடிப்பது என்பது மிகநல்ல செயல்பாடுதான். சாலையில் பல வேகத்தடைகள் உள்ளபோது தேவையின்றி வாகனத்தின் வேகத்தை கூட்டக்கூடாது என்பதுபோலவே தேவையில்லாமல் பொருளாதார வளர்ச்சியில் அழுத்தம் கொடுக்கக்கூடாது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்தது பற்றி பேசுகையில் இதை மட்டுமே அடிப்படையாக வைத்து நாம் பெரிதாக பதற்றம் அடையத் தேவையில்லை. உலகின் அனைத்ஹ்டு நாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் டாலர் வலுவாகி இருக்கிறது. நமது ரூபாய் மதிப்பு, டாலரைத் தவிர்த்து பிற நாணயங்களுக்கு எதிராக உயர் மதிப்பை அடைந்திருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்” என்று கூறினார்.