பாரதம் உலகின் முதலீட்டு இலக்கு

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், நியூயார்க்கில் உள்ள பாரதத்தில் இருந்து புலம்பெயர்ந்த மக்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர், “பாரதம் உலகின் முதலீட்டு இலக்காக வேகமாக மாறி வருவதால் நமது தாய்நாட்டில் முதலீடு செய்ய இது சிறந்த நேரம். கடந்த எட்டு ஆண்டுகளில் பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட வணிகம் சார்ந்த நடவடிக்கைகளில் சீர்திருத்தங்கள், இணக்கத் தேவைகளைக் குறைத்தல், கடந்த கால சுயபரிசோதனை செய்யப்பட வேண்டிய வரி விதிப்பை நீக்குதல், கார்ப்பரேட் வரியை எளிமைப்படுத்துதல் போன்றவை செயல்படுத்தப்பட்டுள்ளது. உலக வங்கி அறிக்கையின்படி, பாரதத்தில்  “வியாபாரம் எளிதாக செய்வதற்கான தரவரிசையில் 2014ம் ஆண்டில்142ல் இருந்து  2022ம் ஆண்டில் 63 ஆக உயர்ந்துள்ளது. நம் நாட்டில் 5ஜி, செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா விமானங்கள், குறைக்கடத்திகள், பிளாக் செயின், பசுமை ஆற்றல் மற்றும் விண்வெளிப் பொருளாதாரம் போன்ற  துறைகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. பாரதத்தில் தற்போது வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் வளாகங்களை அமைக்கும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம். அமெரிக்காவில் பயிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களில், பாரத மாணவர்கள் தான் இரண்டாவது பெரிய குழுவாக இருக்கின்றனர். இதன் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையிலான அறிவு, தொழில்நுட்பம், ஆராய்ச்சி, வளம் போன்றவற்றில் கருத்து பரிமாற்றம் நடைபெற்று, திறமைகள், அறிவு பொருளாதாரம் மேம்படும். பாரத அமெரிக்க உறவுகள் 21ம் நூற்றாண்டின் உறுதியான கூட்டாண்மையாக உருவெடுத்துள்ளது. ஒரு தேசமாக பாரதம் முன்னேறிச் செல்வதற்கு நீங்கள் பங்களிக்க வேண்டும்” என கூறினார்.