சீனாவுக்கு போட்டியாக பாரதம்

டெல்லியில் உள்ள பி.எச்.டி வணிக மற்றும் தொழில் அமைப்பு, ‘பாரதத்தின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், இறக்குமதியைக் குறைப்பதற்குமான வாய்ப்புகள் மற்றும் சாத்தியங்கள்’ என்ற தலைப்பில் நடத்திய ஆய்வில், வரும் ஆண்டுகளில் பாரதம், சீன பொருட்களின் இறக்குமதியை 40 சதவீதம் குறைக்கும் திறன் பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வில் பாரதத்தின் மிகப்பெரிய இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்களான சீனா மற்றும் அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தகத்தினை ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 2020 கொரோனா பெருந்தொற்று காலத்தை தவிர சமீபத்திய ஆண்டுகளில் சீனாவிலிருந்து இறக்குமதி கணிசமாக அதிகரித்துள்ளது என தெரிய வந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் பிரதீப் முல்தானி இதுகுறித்து கூறுகையில், வரவிருக்கும் ஆண்டுகளில் சீனாவிடமிருந்து ரூ. 2.5 லட்சம் கோடி மதிப்பிலான இறக்குமதிகளை குறைக்கும் மகத்தான ஆற்றலை பாரதம் கொண்டுள்ளது. தற்போதே பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கிறோம். ஆனால் குறைந்த அளவில் அவை உள்ளன. உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் மற்றும் பிரதம மந்திரி கதி சக்தி திட்டம் போன்ற மத்திய அரசின் ஆற்றல் மிகு திட்டங்கள் பாரத உற்பத்தியாளர்களை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய ஊக்குவிக்கின்றன. இது சீனாவுக்கு போட்டியாக அமையும். மின்னணு, ஹார்டுவேர், மருந்துப் பொருட்கள் என 14 துறைகளில் பாரதம் கவனம் செலுத்த வேண்டும். அதன் மூலம் சீனாவை சார்ந்திருப்பது குறையும். மத்திய அரசின் உதவியால் இத்துறைகளில் பாரதம் ஏற்றுமதியை அதிகரிக்கும். மின்சாரம், மின்னணு உதிரிபாகங்கள் போன்ற துறைகளில் சீனாவில் இருந்து நம் நாடு இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சம் கோடி. மருந்து மூலப்பொருட்கள், இயந்திரங்கள், உதிரிபாகங்கள், பிளாஸ்டிக், உரங்கள் போன்றவற்றின் இறக்குமதியின் மதிப்பு ரூ. 2 லட்சம் கோடி. இவற்றில் வருங்காலங்களில் நாம் ஏற்றுமதியாளர்களாக மாற வாய்ப்புண்டு” என்று கூறினார்.