பாரதம் மூன்றாவது இடம் பெறலாம்

பாரதம் 2029ல் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி காணலாம் என பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ) ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. பாரதம் மற்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றது. மற்ற சர்வதேச நாடுகள் பணவீக்கத்தின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் பாரதம் அந்தளவுக்கு மோசமான நிலையில் என நிபுணர்கள் கூறியுள்ளனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரதம் நடப்பு நிதியாண்டில் இரு இலக்கில் வளர்ச்சி காணலாம். இங்கு பொருளாதார மந்தநிலைக்கு வாய்ப்பு பூஜ்ஜிய சதவீதம்தான் உள்ளது என நம்பிக்கை தெரிவித்திருந்தார். அதற்கேற்ப உலக பொருளாதாரத்தில் பாரதம் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. இதற்கு இங்கிலாந்தின் பொருளாதார வீழ்ச்சி, எரிபொருள் விலைவாசி, அரசியல் குழப்பங்கள் போன்ற காரணங்கள் ஒருபுறம் இருக்க, பாரதம் இங்கு மிகப்பெரிய உள்கட்டமைப்பு மாற்றங்கள், ஸ்டார்ட் அப் சூழல் ஊக்குவிப்பு, வெளிநாட்டு முதலீடுகள் ஊக்குவிப்பு போன்ற பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது என்பதையும் இதற்கு காரணம் சொல்லலாம். இந்த சூழலில், எஸ்.பி.ஐ. தலைமை பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷ் தலைமையிலான குழுவினர் பாரதப் பொருளாதார வளர்ச்சி குறித்த ஒரு ஆய்வை நடத்தியது. அதன் ஆய்வறிக்கையில், ‘பாரத பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும்போது, 2014ல் பாரதம் உலகளவில் 10வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்தது. கடந்தாண்டு 6வது இடத்துக்கு முன்னேறியது. நிகழாண்டு பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 5வது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. இதே பொருளாதார வளர்ச்சி தொடர்ந்தால், பாரதம் மேலும் 2 இடங்கள் முன்னேறி 3வது இடத்தை பிடிக்கும். 2027ல் பாரதம் ஜெர்மனியையும் 2029ல் ஜப்பானையும் விஞ்ச வாய்ப்புள்ளது. நிகழும் நிதியாண்டின் முதல் காலாண்டில் பாரதத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் நடப்பு நிதியாண்டில் பாரதம்தான் மிக வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதார நாடாக இருக்கும். நடப்பு நிதியாண்டில் நமது நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 6.7 முதல் 7.7 சதவீதம் வரை இருக்கும். உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை தொடர்ந்து நீடித்தால் இது 6 முதல் 6.5 சதவீதமாக குறையலாம்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் நிலவி வரும் பொருளாதார சூழல், கெடுபிடிகள், மந்தநிலை, நிறுவனங்கள் வெளியேற்றம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் பாரதத்துக்கு சாதகமாக அமையலாம், இது பாரதத்தில் முதலீடுகளை அதிகரிக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.