பிரதமர் மோடி அறிவித்த மகத்தான ‘தற்சார்பு பாரதம்’ திட்டத்தின்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 101 பொருட்களை இறக்குமதி செய்ய ராணுவ அமைச்சகம் தடை விதித்தது. மேலும் 108 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்தப் பொருட்களை பாரதத்திலேயே தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடைகளை, 2023ம் ஆண்டுக்குள் முழுமையாக அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முப்படைகளில் பயன்படுத்தப்படும், 2,5௦௦க்கும் அதிகமான பொருட்கள் தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. மேலும், 351 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. இத்தடை, மூன்று ஆண்டுகளில் முழுமையாக அமல்படுத்தப்படும். இவை நமது நாட்டுத் தொழிற்சாலைகளில் இருந்தே கொள்முதல் செய்யப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் 3,000 கோடி ரூபாய்க்கு மேல் அன்னிய செலவானி மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.