எந்த ஒரு வளர்ந்து வருகின்ற தேசத்திற்கும் அதன் தலைமையின் நோக்கம் பொதுவாக என்னவாக இருக்கும்? சமூகம், பொருளாதாரம் மற்றும் இதர துறைகளின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு அந்த நாட்டின் முன்னோக்கிய பயணம், அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், நல்ல குடிமக்கள், அவர்களின் வளமான வாழ்வு, சிறந்த தலைமை போன்றவைகளைத் தவிர வேறு என்னவாக அது இருக்க முடியும்?
பிரதமர் மோடி தலைமையில் அமைந்த இன்றைய புதிய பாரதம் அதைத்தானே செய்து வருகிறது! ஆம். வல்லரசுகளின் அழுத்தங்களுக்கெல்லாம் அடிபணிந்த காலம் போய் இன்று, தற்சார்பு என்ற சிந்தனையில், செயல்பாட்டில் வேகமாகவே வளர்த்து வருகிறது நமது தேசம். அதற்கு அச்சாரமாக, ஆதாரத் திறவுகோலாகவே நாம் நமது எழுபத்தைந்தாவது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம்.
அதிகாரபூர்வமாக நேற்று நடைபெற்றது 76வது சுதந்திர தினத்தின் துவக்கம் என்றாலும், 12 மார்ச் 2021ல் தொடங்கிய 75வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டம் நேற்றுடன் நமக்கு நிறைவடையவில்லை. அது வருகிற 2023 ஆகஸ்ட் 15வரை தொடரவுள்ளது. இதனை முன்னிட்டு மத்திய மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் எழுச்சியுடன் நடைபெறவுள்ளது. இவற்றில் நாமும் உற்சாகத்துடன் பங்கேற்போம்.
முன்னதாக, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை மூன்று நாட்களும் மக்கள் தங்கள் வீடுகளில் கொடியேற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதற்கு மக்கள் கொடுத்த வரவேற்பு அபரிமிதமானது. அஞ்சலகம், கடைகள் அனைத்திலும் தேசியக்கொடிகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. பல கடைகள் ஏறி இறங்கியும் பலருக்கும் கொடிகள் கிடைக்கவில்லை. வீடுகள் மட்டுமல்ல, கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், கடைகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள், லாரிகள், கார்களில் எல்லாம் தேசியக்கொடிகள் மூன்று நாட்களும் பட்டொளி வீசிப் பறந்தன. அரசு கொடியேற்ற கூறிய 3 நாட்களையும் தாண்டி ஆகஸ்ட் 16ம் தேதி கூட கொடிகள் பறந்த பல இடங்களில் காண முடிந்தது. இது தேசத்தின், தேசியக்கொடியின் மீதான நமது மக்களின் அளவற்ற ஈர்ப்புக்கும் பாசத்திற்கும் கட்டியம் கூறியது.
உலக அளவில் அனைத்துப் மக்களுக்கும் அனைத்து பாலினத்தவர்க்கும் சமத்துவம் உள்ள நாடு என்று உண்டென்றால் நமது பாரதம் மட்டும்தான். அதனால்தான் தொடர்ந்து முன்னேற்றத்தைக் காண நாம் விழைகிறோம். சீனாவின் மக்கள் தொகை 1.426 பில்லியனுடன் ஒப்பிடுகையில், 2022ம் ஆண்டில் பாரதத்தின் மக்கள் தொகை 1.412 பில்லியனாக உள்ளது. 2023ம் ஆண்டில் பாரத மக்கள் தொகை சீனாவை மிஞ்சும் என்றும், 2050ம் ஆண்டில் நமது நாட்டின் மக்கள் தொகை 1.668 பில்லியனாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இதனை உலக நாடுகள் நமது பலவீனமாக நினைத்தது. ஆனால் இதுவே நமது பலம், மக்கள் தொகையுடன் இணைந்து வேற்றுமையில் ஒற்றுமை, இளைஞர்கள் சக்தி போன்றவையும் நமது பலம்.
நமது நாடு ஒரு வல்லரசாகவும், உலக அளவில் ஜனநாயக ரீதியாக வெற்றிபெற்ற நாடாகவும், உலகின் குருவாகவும் மாற நம்மில் யாருக்குத்தான் கனவுகளும் ஆசைகளும் இருக்காது? 2050ல் பாரதத்தை எப்படிக் காட்சிப்படுத்தப் போகிறோம் என்பது தற்போது நாம் மேற்கொள்ளவுள்ள கல்வி, பொருளாதாரம், அந்நிய உறவு மேம்பாடு, தகவல் தொழில்நுட்ப தொடர்பு, உள்கட்டமைப்பு போன்ற வளர்ச்சி பணிகளும் அதனை அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு நாம் எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்பதும் இதில், நமது மக்களின் அர்ப்பணிப்புமே தீர்மானிக்கப் போகின்றன.
மற்ற வளர்ந்த நாடுகளை போலவே, நமது நாட்டுக்கும் வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்று ஒரு கனவு உள்ளது. அக்கனவு நனவாகிறபோது, அதனால் நாமும் வரும் தலைமுறையினருக்கும் பெருமைப்பட முடியும். 2050ல் நம் நாடு எப்படி இருக்கப்போகிறது என்கிற சீரிய சிந்தனை, செயல்பாடுகள் எல்லாம் இன்று நாம் உருவாக்குவதில்தான் உள்ளது. வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், ஊட்டச்சத்து குறைபாடு, ஊழல், ஜாதி பாகுபாடு மற்றும் பிற சமூகத் தீமைகளற்ற முன்னேறிய பாரதத்தை காண நமது பிரதமர் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார் என்பது நாம் கடந்த எட்டு ஆண்டுகள் ஆட்சி செயல்பாடுகளின் மூலம் அறிந்து வருகிறோம். நாட்டின் ஒரு சில மாநில மக்களில் சிலர் அங்குள்ள உள்ளூர் நிகழ்வுகளால் அஞ்சி வாழ்ந்த காலம் ஒன்றுண்டு. இன்று நிலைமை சீரடைந்து அங்கெல்லாம் முன்னேற்றப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
இதுபோன்ற தொடர் செயல்பாடுகள் மூலம், அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில், பாரதம் உள்நாட்டில் தன்னிறைவுடன் உலக அளவில் சக்திவாய்ந்த நாடாக மாறும். அதற்கு இன்றே ஆல் போல வேரூன்றும் அளவிற்கு பதியன் போடப்பட்டு விட்டது. இதன் மூலம், 2050ம் ஆண்டில் வளர்ச்சி, பாலின சமத்துவம், வேலைவாய்ப்பு, ராணுவ பலம், தற்சார்பு மற்றும் பிற காரணிகளின் பாரதம் உலகில் மிக முன்னேறிய நிலையில் இருக்கும். நமது விடுதலை போராட்ட வீரர்கள் கனவு கண்டபடி உலகின் குருவாக பாரதம் மாறும் என்பது திண்ணம்.
ஆர். கிருஷ்ணமூர்த்தி