விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி கிழக்குத் தெருவில் வசித்து வருபவர் ராஜா. இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தேங்காய் பழக்கடை நடத்திவருகிறார். இவருடிய 17 வயது மகள் சின்னையாபுரத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ராஜாவின் மனைவி, தன் 17 வயது மகளுக்கு தி.மு.கவை சேர்ந்த இருக்கன்குடி பேரூராட்சித் தலைவர் செந்தாமரை என்பவரின் மகன் சுலைமான் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதை தட்டிக்கேட்டதற்கு தன்னை மானபங்கப்படுத்தியதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருக்கன்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர், பேரூராட்சித் தலைவர் குடும்பத்தினர் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை. இதையடுத்து தன் மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்த தாய் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் தினந்தோறும் திமுகவினரின் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. தீ குளித்தால் தான் நீதி கிடைக்குமா? கட்சியில் உள்ளவர்கள் செய்யும் குற்றங்களைக் கண்டுகொள்ளாமல், சட்டம் ஒழுங்கு தனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று முதல்வர் முழங்குவதால் எந்தவித பயனும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அரசு உடனடியாக வழி செய்யவேண்டும். கயவர்களைக் கைது செய்யாவிட்டால் விருதுநகரில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க பா.ஜ.க தயங்காது’ என தெரிவித்துள்ளார்.