பாதுகாப்பு ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் மத்திய அரசு பல கொள்கை முயற்சிகளை எடுத்து சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. 2014ல் வெறும் 686 கோடி ரூபாயாக இருந்த பாரதத்தின் பாதுகாப்பு ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் சுமார் 16,000 கோடி ரூபாய் மதிப்பை எட்டியுள்ளது. இந்த 23 மடங்கு அதிகரிப்பு உலகளாவிய பாதுகாப்பு உற்பத்தித் துறையில் பாரதத்தின் முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. “85க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதிகள் செய்யப்பட்டதன் மூலம், நமது நாட்டின் பாதுகாப்புத் துறையானது அதன் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திறனை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது. தற்போது 100 நிறுவனங்கள் பாதுகாப்புத் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கின்றன.
ஏற்றுமதி நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு, தொழில்துறைக்கு ஏற்றதாக மாற்றப்பட்டு, துவக்கம் முதல் இறுதி வரை ஆன்லைன் ஏற்றுமதி அங்கீகாரம் மற்றும் தாமதங்களைக் குறைத்து வணிகம் செய்வதை எளிதாக்குதல், தற்சார்பு பாரதம், உள்நாட்டு வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பது உள்ளிட்ட மத்திய அரசின் சீரிய முயற்சிகள் இதில் மிகப்பெரிய அளவில் உதவியுள்ளன. மேலும், இதன் மூலம் நீண்ட காலத்திற்கு இறக்குமதியைச் சார்ந்திருப்பதையும் இது குறைக்கிறது.
2019ல் பாதுகாப்புத் துறையின் ஒட்டுமொத்த செலவினத்தில் 46 சதவீதமாக இருந்த வெளிநாட்டு மூலங்களிலிருந்து பாதுகாப்புக் கொள்முதல் செலவினம் 2022 டிசம்பரில் 36.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஒரு காலத்தில் பாதுகாப்பு உபகரண இறக்குமதியாளராக அறியப்பட்ட பாரதம், இப்போது பலதரப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. டார்னியர் 228 போன்ற விமானங்கள், பீரங்கிகள், பிரம்மோஸ் ஏவுகணைகள், பினாகா ராக்கெட்டுகள், லாஞ்சர்கள், ரேடார்கள், சிமுலேட்டர்கள், கவச வாகனங்கள் போன்ற முக்கிய தளவாடங்கள். தேஜாஸ் போர் விமானம், லகுரக போர் ஹெலிகாப்டர்கள் போன்ற பாரதத்தின் உள்நாட்டு தயாரிப்புகளுக்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருகிறது.