பாதிரிகளின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை

ஜலந்தரைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பாதிரி பஜிந்தர் சிங் மற்றும் ஹர்பிரீத் தியோல் என்ற பஞ்சாபைச் சேர்ந்த இரண்டு கிறிஸ்தவ மத போதகர்களின் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜலந்தர், கபுர்தலா, அமிர்தசரஸ், நியூ சண்டிகர், மொஹாலி, குராலி உள்ளிட்ட பகுதிகளில் போதகர்களுக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி அவர்களது சொத்துக்கள், வங்கி கணக்குகள், கணினிகள், பதிவேடுகள் மற்றும் பிற ஆவணங்களை கைப்பற்றினர். இதில் முக்கிய ஆவணங்கள், கணினிகள், பதிவேடுகள் கைப்பற்றப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, பாஸ்டர் பஜிந்தர் சிங் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டபோது அங்குள்ள ஒரு பாதிரியுடன் தொடர்பு ஏற்பட்டு கிறிஸ்தவ மதத்தில் நாட்டம் கொண்டதாக கூறப்படுகிறது. இதைத்தவிர, பஞ்சாபின் ஜிராக்பூரைச் சேர்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2018ல் அவர் கைது செய்யப்பட்டார். பல ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நந்தினி என்பவரை அற்புதத்தால் குணப்படுத்தித் தருவதாகக் கூறி ரூ. 80 ஆயிரத்தை கொள்ளையடித்த வழக்கும் 2021ல், ஒரு சிறுவனை பயன்படுத்தி, மக்களை கிறித்தவ மதத்திற்கு மாற்றத் தூண்டிய வழக்கும் பாதிரி பஜிந்தர் சிங் மீது உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், பஞ்சாபின் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் நடிகர் சோனு சூட் ஆகியோர் மோகாவில் பஜிந்தர் சிங் கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தனர். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக விஷ்வ ஹிந்து பரிஷத் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. அதைத் தொடர்ந்து சரண்ஜித் சிங் சன்னி அந்த நிகழ்ச்சியில் இருந்து அவசரமாக விலகினார். வெளிநாடுகளிடம் இருந்து கணிசமான அளவு நிதி பெறும் இவர்கள், ஹீலிங் மினிஸ்ட்ரி என்ற பேரில் பல சர்ச்சுகளை நடத்துகின்றனர்.