தொழில் துறையினருக்காக மத்திய அரசு வெளியிட்ட உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) குறித்த சில சந்தேகங்கள் தொழில்துறையினரால் கேட்கப்பட்டன. அதற்கான விளக்கத்தை உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டி.பி.ஐ.ஐ.டி) தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, வெள்ளைப் பொருட்கள் என பொதுவாக அழைக்கப்படும் எல்.ஈ.டி விளக்குகள், பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் தொழில்துறையினருக்கு மத்திய அரசு தரும் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகையை பெற அவர்கள் முழு அர்ப்பணிப்பு அவர்களுடைய முதலீட்டை செய்ய வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அல்லது இடையில் வெளியேறினால், அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஊக்கத்தொகையை வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், விண்ணப்பதாரர், முதலீடு, நிகர அதிகரிப்பு விற்பனையின் அளவுகோல்களை பூர்த்தி செய்யாத அந்த குறிப்பிட்ட நிதியாண்டுக்கான ஊக்கத்தொகையை அவர் பெற தகுதியற்றவராக்க் கருதப்படுவார். இருப்பினும், விண்ணப்பதாரர் அதற்கடுத்த வருடங்களில் மீண்டும் ஊக்கத் தொகைகளைக் கோருவதற்கு எந்த தடையும் விதிக்கப்படாது. என்றும் துறை தெளிவுபடுத்தியது.