நாடாளுமன்றத்திற்கான 2014ம் ஆண்டுத் தேர்தல் பிரச்சாரத்தில், பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த நரேந்திர மோடியை ‘துண்டு துண்டாக வெட்டுவேன்’ என்று மிரட்டியவர் காங்கிரசின் இம்ரான் மசூத். இது பெரும் சர்ச்சையானதுடன்அவருக்கும் காங்கிரசுக்கும் பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியது. ஆனால், அவர் ராகுலுக்கும் பிரியங்காவிற்கும் மிகவும் பிடித்தவராகிவிட்டார். இதனால் 2016ம் ஆண்டு உ.பி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகவும் பின்னர் கட்சியின் தேசிய செயலாளராகவும் நியமிக்கபட்டார் மசூத். சஹரன்பூரிலிருந்து ஐந்து முறை காங்கிரஸ் மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷித் மசூத்தின் மருமகன் இவர். இப்பகுதியில் 42 சதவீத மக்கள்தொகை கொண்ட முஸ்லிம்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்றிருந்தார். எனினும், 2019 மக்களவைத் தேர்தலில் சஹாரன்பூரில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் தற்போது கங்கிரசை கைகழுவி சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார். வாக்குகள் பிரிவதைத் தடுக்கவே வெளியேறுவதாக மசூத் தெரிவித்துள்ளார். அவர் வெளியேறுவது, உ.பி காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.