தமிழகத்தில் ஒருவரது சொத்தை, அவருக்கு தெரியாமல் போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம் வாயிலாக, வேறு நபர்கள் விற்பனை செய்யும் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதில், சம்பந்தப்பட்ட சொத்துக்கள் தொடர்பான மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்யும் விஷயத்தில், பொது மக்களை சார்பதிவாளர்கள் கடுமையாக அலைக்கழித்து வந்தனர். இதற்கு தீர்வாக, பதிவு சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன்படி, மோசடியாக பதிவு செய்யப்பட்டது என்பதற்கான உரிய ஆதாரங்களை சொத்தின் அசல் உரிமையாளர் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் சார் பதிவாளர், மாவட்ட பதிவாளர் விசாரணை மேற்கொண்டு, மோசடி பத்திரத்தை ரத்து செய்யலாம். மோசடி பத்திரத்தை பதிவு செய்வது, அதற்கு எதிரான புகார்களை விசாரிக்க மறுப்பது என, சொத்து அபகரிப்பாளருடன் கூட்டு சேர்ந்து செயல்படும் சார் பதிவாளர்களுக்கு மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அமலாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த சட்டத் திருத்தத்தால், கோயில் நில அபகரிப்பு, நீர் நிலை ஆக்கிரமிப்பு ஆவணங்கள், அங்கீகாரமில்லாத மனைகளை பதிவு செய்யும், மோசடி பத்திரங்களை பதிவு செய்ய துணை போகும் சார் பதிவாளர்கள், சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.