காங்கிரஸ் கட்சி, வரவிருக்கும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான அதன் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை அறிவித்தது. இந்தப் பட்டியலில் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, முகுல் வாஸ்னிக், மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, ஜெகதீஷ் ஷெட்டர், சசி தரூர் உட்பட 40 காங்கிரஸ் தலைவர்கள் அடங்கிய நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியது. இருப்பினும், இந்த நட்சத்திர பேச்சாளர்கள்களில் சச்சின் பைலட்டின் பெயர் சேர்க்கப்படவில்லை. அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசின் செயலற்ற தன்மையைக் காரணம் காட்டி, ராஜஸ்தானில் தனது கட்சியின் அரசுக்கு எதிராக சச்சின் பைலட் போர்கொடி தூக்கினார் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் குறிப்பிடத்தக்க வகையில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி ஸ்ரீனிவாஸ் பெயரும் சேர்க்கப்பட்டு உள்ளது. இரு தினங்களுக்கு முன்னர்தான் அசாம் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அங்கிதா தத்தா, ஸ்ரீனிவாஸ் தன்னை துன்புறுத்துவதாகவும் தன்னை தொடர்ந்து பயன்படுத்துவதாகவும், பாலினத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், ஸ்ரீனிவாஸ் மீதான தனது குற்றச்சாட்டுகளை கட்சித் தலைமை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, புகார் அளித்து ஆறு மாதங்கள் ஆகியும், ராகுல், பிரியங்கா, சோனியா, மல்லிகார்ஜுன் கார்கே, உள்ளிட்ட எவரும் இதனை விசாரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தார். ஆனால், இந்த புகார்கள் கூறப்பட்ட அடுத்த நாளிலேயே ஸ்ரீனிவாஸ் கர்நாடக தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.