கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி உள்ளதா என்பதை அறிய, ‘செரோ டெஸ்ட்’ எனப்படும் பரிசோதனையை இந்திய மருந்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மேற்கொண்டது. இதுவரை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 28,975 மக்களிடமும் 7,252 சுகாதார பணியாளர்களிடமும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த பரிசோதனை அறிக்கையை ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘பாரதத்தின் மக்கள் தொகையில், 6 வயதுக்கு மேற்பட்ட 68 சதவீதம் பேருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகியுள்ளது. 40 கோடி மக்கள் எளிதில் தொற்று பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர். சுகாதாரப் பணியாளர்களில் 10ல் ஒருவர் தடுப்பூசி போடவில்லை. எனவே, மக்கள் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வது, தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் பயணம் செய்யலாம். குழந்தைகளுக்கு கொரோனா பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே, பள்ளிகளில் பணிபுரிபவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்ட பிறகு பள்ளிகளை திறக்கலாம். அதுவும், முதலில் ஆரம்ப பள்ளிகளை திறப்பதே சிறந்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.