பாரதத்தை புகழ்ந்த ஐ.எம்.எப்

இந்திய அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் நேரடி பணப் பரிமாற்றத் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) நிதி விவகாரத் துறையின் துணை இயக்குநர் பாவ்லோ மௌரோ, “இந்தியாவில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. உலகெங்கிலும் உள்ள வேறு சில உதாரணங்களிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவ்வகையில், இந்தியாவின் விஷயம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. உண்மையில், அந்நாட்டின் பிரம்மாண்ட மக்கள் தொகை அளவு காரணமாக, குறைந்த வருமானம் உள்ள மக்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவ முற்படும் அரசின் திட்டங்கள் எப்படி அவர்களை சரியாக எவ்வாறு சென்றடைகின்றன என்பது ஒரு தளவாட அற்புதம். இந்தியாவில் பெண்கள், முதியவர்கள், விவசாயிகள் போன்ற குறிப்பிட்ட குழுக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்திய அரசு, தனித்துவ அடையாள அமைப்பான ஆதாரைப் பயன்படுத்துவது ஈர்க்கக்கூடிய ஒன்று. நலதிட்டத்திற்கான சரியான மக்களை அடையாளம் கண்டு டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றத்தை செயலாக்குவது, மொபைல் பேங்கிங் மூலம் நிதியைப் பயன்படுத்துவது புதுமையானது. இதர நாடுகளும் இதனை கற்றுக் கொள்ள வேண்டும்”என்று பேசினார். ஐ.எம்.எப் அமைப்பின் நிதி விவகாரத் துறையின் இயக்குநர் விட்டோர் காஸ்பர் கூறுகையில், “இந்தச் சூழலில் நாங்கள் இந்தியாவுடன் ஒத்துழைக்கிறோம். தேவையுள்ள மக்களை கண்டறிந்து அவர்களுக்கு அரசின் ஆதரவை வழங்குவதில் நிலவும் சிக்கல்களைத் தீர்க்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான மிகவும் ஊக்கமளிக்கும் எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்” என பாராட்டுத் தெரிவித்தார்.