நவீன அலோபதி மருத்துவத்தின் செயல்திறன் குறித்து பதஞ்சலி நிறுவனர் யோகா குரு பாபா ராம்தேவ் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து, ஐ.எம்.ஏ அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், அவர் அடுத்த 15 நாட்களுக்குள் மன்னிப்பு கோரி வீடியோவை வெளியிட வேண்டும், எழுத்துப்பூர்வ மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தவறும் பட்சத்தில் அவரிடம் ரூ.1,000 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்குத் தொடரப்படும் என கூறப்பட்டுள்ளது.மேலும், யோகா குரு பாபா ராம்தேவ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத்துக்கு ஐ.எம்.ஏவின் உத்தரகண்ட் பிரிவு கடிதம் எழுதியுள்ளது.முன்னதாக, பாபா ராம்தேவ் தனது வார்த்தைக்கு மன்னிப்பு கோரியதுடன் வார்த்தைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தார். ஆனால் அதன் பின்னரும் இவ்வழக்கு தொடர்பான மிரட்டல் தொனியிலான அறிவிப்பு அவருக்கு விடுக்கப்பட்டுள்ளது என்பதும், அவர் கேட்ட 25 கேள்விகளுக்கு ஐ.எம்.ஏ உரிய பதிலை முறையாக அளிக்காமல், கேள்விகள் வெளியான மறுநாளே இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.