நான் தயார் நீங்கள் தயாரா?

இரு தினங்களுக்கு முன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டிருந்த கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, அவர், “நான் கையில் கட்டியிருக்கும் வாட்ச், பாரதம் ரபேஃல் விமானங்களுக்கான ஒப்பந்தம் செய்தபோது அந்த விமானத்தின் பாகங்களை வைத்து செய்யப்பட்டது. உலகத்தில் இந்தவகை வாட்ச்சுகள் 500 தான் இருக்கிறது. அதில் 149வது வாட்ச் என்னுடையது. எனக்கு ரஃபேல் விமானத்தை ஓட்டக்கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை. அதனால், நம்முடைய நாட்டிற்காக ரஃபேல் விமானத்தின் பாகங்களில் இருந்து செய்யப்பட்ட வாட்சை நான் கட்டியிருக்கிறேன். ஏன் என்றால் நான் தேசியவாதி. நான் பிரிவினைவாதம் பேசுபவன் கிடையாது. ரஃபேல் நம் நாட்டிற்குக் கிடைத்திருக்ககூடய மிகப்பெரிய பொக்கிஷம்” என்று கூறியிருந்தார். இது குறித்து தி.மு.கவினர் விமர்சித்தது வந்தனர்.

இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்த அண்ணமலை, “தி.மு.கவினர், என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன். நான் தமிழக பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்றதற்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது, எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டு கால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்ட் 2011 முதல் ஐ.பி.எஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம், எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியைப் போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன். நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார். இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் தி.மு.கவினர் மற்றும் தி.மு.க தலைவர்கள் தமிழக சகோதர சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா?” என்று கேட்டுள்ளார்.