புளு கிராஃப் டிஜிட்டல் பவுண்டேஷன் நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள “மோடியும் அம்பேத்கரும்: சீர்திருத்தவாதியின் சிந்தனையும், செயல்வீரரின் நடவடிக்கையும்” என்ற புத்தகத்திற்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.
அதில் அவர் ‘நதிநீர் மற்றும் பாசனம் தொடர்பான கொள்கை முடிவுகளை வகுத்தளித்தவர் டாக்டர் அம்பேத்கர் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். 2016ல் முதலீட்டாளர் மாநாட்டிலும் மோடி இதனை குறிப்பிட்டுள்ளார். பாபாசாகேப் அம்பேத்கரை தெரிந்துகொண்டால் மட்டும் போதாது. அவருடைய மதிப்பை அறிந்து, அவருடைய கருத்தை நடைமுறைப்படுத்துபவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
இந்த புத்தகம், பிரதமர் மோடி தலைமையில் பாரதத்தின் வளர்ச்சி பாதையில் தொழில்துறை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் என அம்பேத்கரின் கருத்தும் சிந்தையும் சந்திக்கும் இடத்தை ஆய்வு செய்கிறது. பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் பல சாதனைகளை படைத்துள்ளது. சாலைகள், மெட்ரோ ரயில் போன்ற உலகத் தரமான உட்கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.
முத்தலாக் தடை சட்டத்தால் முஸ்லிம் பெண்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை மோடி ஏற்படுத்தியுள்ளார். சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு சட்டப் பாதுகாப்பு, ஏழைகளுக்கு வீடு, கழிப்பிடங்கள் கட்டிக்கொடுப்பது என மக்களின் வாழ்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். பெண்களின் திருமண வயதை உயர்த்துவதால் பெண்கள் படிக்க முடியும். இலவச எரிவாயு திட்டம், குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை பாகாப்பு, குழந்தைகளுக்கு கற்பிப்போம், தற்சார்பு இந்தியா என அம்பேத்கரும் நரேந்திர மோடியும் ஒன்றுபடும் இடங்களை இந்த புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.
இருவருமே ஏழ்மையையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்தவர்கள். அதை ஒழிக்க பாடுபட்டவர்கள். இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளை கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். விடுதலைப் போராட்ட வீரர்கள் கனவு கண்டபடி புதிய இந்தியா எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதை தெரிவிக்கும் இப்புத்தகத்தை இளம் தலைமுறையினருக்கு நான் பரிந்துரைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.