காசி கோயிலில் இளையராஜா இசை நிகழ்ச்சி

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பழமை வாய்ந்த, உலகப்புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழக பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் செல்கின்றனர். இதை போற்றும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரில் அங்கு, ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை பிரதமர் மோடி கடந்த 19ம் தேதி தொடங்கி வைத்தார். அப்போது அதில் இசைஞானி இளையராஜாவும் முக்கிய விருந்தினராக பங்கேற்றார். அவரது சிறப்பு இசை நிகழ்ச்சியும் அதில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காசி விஸ்வநாதர் கோயிலில் இளையராஜா இசைக்க வேண்டும் என கோயில் அறக்கட்டளை நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து காசி விஸ்வநாதர் கோயிலில் வரும் டிசம்பர் 15ல் பக்தி இசை நிகழ்ச்சி நடத்த அறக்கட்டளை சார்பில் இளையராஜாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சிவபெருமானே இசை நிகழ்ச்சி நடத்த அழைத்ததாக கருதி உணர்ச்சிவசப்பட்ட இளையராஜா, இந்த அழைப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டார். காசி விஸ்வநாதர் கோயிலில் முதல் இசை நிகழ்ச்சியாக, இளையராஜாவின் பக்தி இசை நிகழ்ச்சி வரும் டிசம்பர் 15ல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.