மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமண மண்டபம் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி. செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களின் வருகையினால் ஆதரவாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சமூக இடைவெளியும் கடைபிடிக்கப்படவில்லை. அப்போது, கூட்டத்தில் பேசிய அன்பில் மகேஷ், த’மிழக அரசு கொரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் நான் இவ்வளவு பேர் கூடியுள்ள கூட்டத்தில் பங்கேற்றதை முதல்வர் நிச்சயமாகக் கேள்வி கேட்பார். அதற்கு, ‘கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மயிலாடுதுறை மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ளது. அதனால், மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் இக்கூட்டத்தை கொரோனா விழிப்புணர்வு கூட்டமாக நடத்தியதாகக் கூறி சமாளித்து விடுவேன். ஆனால் இக்கூட்டம் மாநாடு போன்று நடப்பதாகக் கூறிய தலைமை கொறடா தான் முதலமைச்சருக்கு பதில் சொல்லியாக வேண்டும்’ எனக் கூறினார். தங்கள் ஆட்சியில் தாங்கள் போட்ட கொரோனா முன்னெச்சரிக்கை உத்தரவை ஒரு அமைச்சரே கடைபிடிக்காமல் இப்படி பேசியது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.