குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கர்நாடகாவைச் சேர்ந்த பித்ரி கைவினை கலைஞர் ஷா ரசீத் அகமது குவாத்ரிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கினார். பித்ரி என்பது தகட்டில் செய்யப்படும் பாரம்பரிய கைவினைத் தொழில். விருது பெற்ற ஷா ரசீத், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ‘‘காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு கூட்டணி ஆட்சி காலத்தில் நான் 10 ஆண்டுகளாக விண்ணப்பித்தும் எனக்கு விருது கிடைக்கவில்லை. பா.ஜ.க அரசு, முஸ்லிம்களுக்கு விருது வழங்காது என நினைத்து, நான் விருதுக்கு விண்ணப்பிப்பதை விட்டுவிட்டேன். நான் நினைத்தது தவறு என்பதை நீங்கள் நிருபித்துவிட்டீர்கள். நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன்’’ என்றார். வாக்குவங்கி அரசியலில் ஈடுபடும் காங்கிரஸ் கட்சியினர், வழக்கம்போல இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் கேள்வி எழுப்பினர், விமர்சனம் செய்தனர். :”வரும் மே மாதம் 10ம் தேதி கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனை முன்னிட்டே ஷா ரசீத் அகமது குவாத்ரி உள்பட கர்நாடகாவில் அதிக அளவிலானோர் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர் என்று நாங்கள் ஏற்கெனவே கூறி வந்தோம். இப்போது ஷா ரசீத் அகமது குவாதாரி பேசியிருப்பதைப் பார்க்கும்போது, யாரோ அவருக்கு இதுபோல பேசும்படி சொல்லித் தந்துள்ளனர் என தெரிகிறது” என்று காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி கூறியிருந்தார்.
இந்நிலையில், விருது பெற்ற குவாத்ரி ஒரு தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “நான் என் மனதிலிருந்தே இந்த வார்த்தைகளை பேசினேன். காங்கிரஸ் காலத்திலும் நான் விருதுக்காக முயற்சித்தேன். ஆனல் கிடைக்கவில்லை. பா.ஜ.க ஆட்சி வந்த பின்னர் அவர்கள், முஸ்லிம்களுக்கு விருது வழங்கமாட்டார்கள் என நினைத்து வருந்தினேன். அதனால் விருதுக்கு முயற்சிக்கவே இல்லை. ஆனால் பிரதமர் அது தவறு என்பதை நிரூபித்துவிட்டார். அதைத்தான் நான் அவரிடம் சொன்னேன். நான் விருது பெறுவதற்காக எந்த அரசியல்வாதியையும் சந்திக்கவில்லை. இதுவரை நான் என் சுய முயற்சியால் மட்டுமே அரசுக்கு என்னைப் பற்றிய குறிப்புகளுடன் விருதுக்காக விண்ணப்பித்தேன். முன்பெல்லாம் எனக்கு பதில் வராது. ஆனால் இப்போது எனக்கு பதில் வருகிறது. நான் கேட்காமலே என்னை அங்கீகரித்து விருது வழங்கப்பட்டு உள்ளது. எனக்கு 68 வயதாகிறது. யாரேனும் சொல்லிக் கொடுக்க நான் என்ன குழந்தையா? கடந்த ஜனவரி 2ம் தேதி எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. எனக்கு பத்மஸ்ரீ விருது வழங்குவதாகக் கூறினார்கள். அன்றைக்கு முழுவதும் நான் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கினேன். எனக்கு தூக்கமே வரவில்லை. பிரதமர் நான் நினைத்தது தவறு என்பதை நிரூபித்திருக்கிறார். நான் காங்கிரஸ் கட்சிக்கே எப்போதும் வாக்களித்திருக்கிறேன். ஆனால் இப்போது பா.ஜ.கவின் பக்கம் திரும்பவுள்ளேன். என் தந்தையும் பித்ரி கலைஞர் தான். நானும் அதே கைவினைக் கலையை பின்பற்ற என் தந்தை விரும்பவில்லை. கலைஞனின் வாழ்க்கை போராட்டம் நிறைந்தது என்பார். ஆனால் இன்று நான் மகிழ்கிறேன்” என்று கூறினார்.