கொரோனா நோய்த்தொற்று. என்ன இது? என்ன செய்கிறது? இதிலிருந்து எப்படி மீள்வது என்பதைப் பற்றிய ஓர் எளிய பார்வை. நாம் பார்க்கும் உலகம் தவிர்த்து வேறு பல உலகங்கள் இருக்கின்றன என்று நம் ஆன்மிகப் பெரியவர்கள் நிறைய நிறைய சொல்லியிருக்கிறார்கள். அதில் நம் கண்ணுக்குப் புலப்படுவனவற்றை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தி வைத்திருக்கிறோம். உலகம் தோன்றியதிலிருந்து ஒவ்வொரு நாளும் மனிதர்களாகிய நாம் பலதரப்பட்ட உயிரினங்களை பலவகைகளில் அழித்துக் கொண்டு தான் இருக்கிறோம். பூமி என்ற உருவில் மனிதன் என்ற நுண்ணுயிர்களை ஆக்கிரமித்து, மற்ற உள்ளுறுப்புகளை (உயிரினங்களை) அழிப்பது போல, மனிதன் என்ற உருவில் கொரோனா என்ற நுண்ணுயிர்கள் பல உள்ளுறுப்புகளை அழித்து விடுகிறது.
மனித இனம் இதுபோன்ற கொள்ளை நோய்களை அடிக்கடி சந்தித்து வந்ததன் அனுபவத்தில், முன்னெப்போதையும் விட இந்த முறை மனித இனத்தைத் தாக்கியுள்ள கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள வேகமாக தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. குறிப்பாக இதில் நம் பாரதம் உலகின் முன்னணியாகத் திகழ்கிறது. இத்தனை விரைவாக இம்மருந்திணை கண்டுபிடித்ததை நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமா? உலக அளவில் இந்த பெருந்தொற்றால் கிட்டத்தட்ட 17.5 கோடி மக்கள் பாதிக்கப் பட்டிருந்தாலும் இறந்தது 38 லட்சம் பேர். அதாவது, உலக நாடுகளின் அரசுகளெல்லாம் கலந்தாலோசித்து நிர்வகித்ததன் காரணமாக மற்ற அனைவரையும் காப்பாற்றி இருக்கிறோம். ஓராண்டுக்கும் மேலாக மனித இனத்தை முடக்கிப் போட்டிருக்கும் இந்தத் தொற்றை கையாளும் அனுபவம் கூடக் கூட, ஒவ்வொரு மனிதனையும் காப்பாற்றாமல் விடுவது மக்கள் நம்பியிருக்கும் அரசின் நிர்வாகமே பொறுப்பாகிறது. அங்கேதான் இப்பொழுது இடறிக் கொண்டிருக்கிறோம்.
இதில் தமிழகத்தைப் பற்றி மட்டும் ஒரு துரிதப் பார்வையைப் பார்க்கலாம். கடந்த ஆண்டினைவிட இவ்வாண்டு கொரானா தொற்று மிகத் தீவிரமாகப் பரவி வருவது என்னவோ உண்மைதான் என்ற போதிலும், கடந்த ஓராண்டாக நாம் கற்று வைத்திருக்கும் அனுபவத்தை அரசியல் மாச்சர்யங்களால் தமிழக அரசு பயன்படுத்தாமல் விட்டு விட்டது. பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, சித்தாந்த விதைப்பெல்லாம் மக்கள் உயிருடன் இருக்கும் போது தான் செய்ய முடியும். மக்கள் உயிருடனேயே அரசியல் செய்வது, தன்னை நம்பி ஓட்டு போட்ட மக்களுக்குச் செய்யும் துரோகம். எல்லாவற்றிற்கும் முதன்மையாக, இந்த திமுக அரசு, கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்கள், அதனால் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துச் சொல்கிறது என்ற யூகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. காரணம், புதைக்க / எரிக்க இடமில்லாத அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கிறது என்று சுடுகாடுகளை விஸ்தீரணம் செய்த இந்த அரசு காட்டிய இறப்பின் எண்ணிக்கை கடந்த ஆண்டினை ஒப்பிடும் போது மிகவும் குறைவான சதவீதத்தில் இருக்கிறது. இறப்பு அதிகமிருந்தால் அரசுக்குக் கேட்ட பெயர் வரும் என்று தவறாகப் புரிந்து கொண்டது திமுக அரசு. தொற்றில் சிக்கியவர்கள்.
அதனால் இறந்தவர்களின் எண்ணிக்கையைச் சரியாக வெளியிட்டால் தான், மருத்துவர்களும் மருத்துவ நிபுணர்களும் அதற்கேற்ப வியூகம் அமைத்து அடுத்தடுத்த இழப்புகளைத் தடுப்பார்கள். எண்ணிக்கையைச் சரியாகக் காட்டினால், மக்களும் தொற்றின் ஆபத்தைப் புரிந்து கொண்டு அரசிற்கு ஒத்துழைப்பு தருவார்கள். எண்ணிக்கையின் வீரியத்தை மனதில் கொண்டு, மத்திய அரசும் தமிழகத்திற்கு அதிக நிவாரணங்களை ஒதுக்கும். வெறும் அரசியல் ஆதாயம் என்ற ஒற்றை விஷயத்திற்காக மக்களின் உயிர்களுடன் திமுக அரசு விளையாடுவது போலவே இருக்கிறது.
அடுத்ததாக, போர்க்காலங்களில் இனம், மதம், கட்சி பேதமின்றி எல்லோரும் ஒருமித்த மனநிலையுடன் செயல்படுவார்கள். இது மனித இனத்தின் மீது தொடுக்கப்பட்ட போர். இதில் பிரதானம் மனித உயிர்களே! ஆட்சிக்கு வந்த புதிதில், எங்களுக்கு கொரோனாவைக் கையாளும் அனுபவம் போதவில்லை என்று, பழைய நிர்வாகிகளை அப்படியே இம்முறையும் பயன்படுத்தாமல் போனது, திமுக அரசின் மிகப்பெரிய குற்றம். கடந்த முறை ஊரடங்கை நிர்வகித்த நிர்வாகிகள் எதையெல்லாம் செய்திருந்தால் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்று பின்னாளில் யோசித்திருப்பார்கள்.
அவர்களையே இந்த முறையும் பயன்படுத்தியிருந்தால், மக்களுக்கான சிரமம் தவிர்த்து இன்னும் இலகுவாகச் செயல்பட்டிருப்பார்கள். திமுக அரசின் அகந்தைப் போக்கால் மக்கள் உயிரிழந்தது தான் மிச்சம். இறுதியாக, கட்டுப்படுத்தத் திறனில்லாமல் போனதைவிட இந்த அரசு, கொரோனா தொற்றை அதிகமாகப் பரப்பிக் கொண்டிருப்பது பெரும் கொடுமை. ஆம்! மக்களுக்கு உதவித் தொகை கொடுக்கிறோம் என்ற பெயரில் மக்களை ரேஷன் கடைகளில் பலமுறை கூடவிட்டது பெருங்குற்றம். மத்திய அரசு கையாளும் முறையைக் கண் முன்னே பார்த்துக் கொண்டே கட்சி ஆட்களை விட்டு டோக்கன் கொடுப்பதும், ரேஷன் கடைகளில் கூடி நின்று போட்டோ எடுத்தும், விளம்பர மோகத்தில் மக்களிடம் கொரானாவைப் பரப்பியதில் இந்தத் திமுக அரசிற்குப் பெரும் பங்குண்டு.
கொரோனாவால் தந்தை அல்லது தாய் அல்லது இருவருமே உயிரிழந்தால் அவர்களின் குழந்தைகளுக்கு ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதையொற்றி தமிழக அரசும் அத்தகைய குழந்தைகளுக்கு நிவாரணம் அறிவித்திருக்கிறது. ஆனால் கொரோனா காரணமாக உயிரிழந்தால் மட்டுமே அந்த நிவாரணத்தை பெறமுடியும்.இந்த நிலையில், பல கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டு மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்பதாக மருத்துவர்கள் அறிவித்துவிடுகின்றனர். இதனால், இறந்த உயிர்கள் தவிர இருக்கின்ற குழந்தைகளின் எதிர்காலமும் கடுமையாக பாதிக்கப்படக் கூடும். எனவே கொரோனா மரணத்தை மூடி மறைக்கும் மனிதாபிமானமற்ற செயல்களில் தயவு செய்து ஈடுபட வேண்டாமே.இந்த அரசிடம் மக்கள் வேண்டிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். உங்கள் அரசியல் விளையாட்டுகளுக்காவது நாங்கள் உயிருடன் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்தாவது, உங்கள் அரசியல் சித்து விளையாட்டுகளைத் தள்ளி வைத்து விட்டு எங்கள் உயிரைக் காப்பாற்றும் வண்ணம் கொஞ்சம் பொறுப்புடன் நிர்வாகம் செய்யுங்கள் என்பதுதான்.