உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாஃபியா தலைவன் அத்திக் அகமதுவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலத்தில் ஏழைகளுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்கும் பணியை யோகி ஆதித்யநாத் தலைமையிலான அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. பிரயாக்ராஜ் மாவட்டத்தின் லுகர்கஞ்ச் பகுதியில் மாஃபியா அத்திக் அகமது வசம் இருந்து விடுவிக்கப்பட்ட அந்த அரசு நிலத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 76 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விண்ணப்பதாரர்களின் சரிபார்ப்பு மாவட்ட நகர்ப்புற வளர்ச்சி அதிகாரிகளால் முடிக்கப்பட்டுள்ளது. 6,030 பேர் வீடுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்ப சரிபார்ப்பில், இதில் 5,127 பேர் தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டது. 903 விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளனர். இங்கு பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம், 1,731 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தில் மூன்று அடுக்கு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. “ஏ” பிளாக்கில் 36 அடுக்குமாடி குடியிருப்புகளும் ‘பி’ பிளாக்கில் 40 வீடுகளும் கட்டப்பட்டுல்ளன. முன்னதாக, அம்மாநில அரசு இந்த நிலத்தை செப்டம்பர் 2021ல் கையகப்படுத்தியது. முதல்வர் யோகி ஆதித்யநாத் இத்திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். பல லட்சங்களில் இங்கு வீடுகள் விற்க்கப்படும் நிலையில், அதே அளவுள்ள குடியிருப்புகள் வெறும் மூன்றரை லட்சம் ரூபாய்க்கு ஏழைகளுக்கு கிடைக்கும். இங்கு மக்களுக்கான சமூகக் கூடங்கள் மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், 1,731 சதுர மீட்டர் நிலத்தில் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விண்ணப்பதாரர்களில் ஒருவரான அசோக், “இவ்வளவு மலிவான விலையில் அனைத்து வசதிகளுடன் கூடிய பிளாட் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. பிரயாக்ராஜில் உள்ள நிலங்களை அதிக் அகமது ஆக்கிரமித்துள்ளார். இந்த நிலங்கள் அவரது பிடியில் இருந்து விடுபடும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் அதன் மீட்பராக இங்கு வந்துள்ளார்” என்று கூறினார்.