தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையின் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக தி.மு.க அரசால் நியமிக்கப்பட்டவர் நாட்டியக் கலைஞரான ஜாகீர் உசேன். தி.க, தி.மு.க அனுதாபியான இவர், இசை பள்ளிகளில் ஆய்வுக்கு சென்றபோது பாலியல் தொல்லை கொடுத்தார்; அத்துமீறி நடந்து கொண்டார் என அடுத்தடுத்து கரூர், சிவகங்கை என பல இடங்களில் பல ஆசிரியைகளிடம் இருந்து புகார்கள் வந்தன. ஜாகீர் உசேன் மீதான பாலியல் புகார் குறித்து பணியிடத்தில் பாலியல் தொல்லைகளை விசாரிக்கும் விசாகா கமிட்டி விசாரித்து, ஜாகீர் உசேன் நிரபராதி என அறிவித்தது. இது தொடர்பாக கரூர் இசைப்பள்ளி ஆசிரியை செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ஜாகீர் உசேன் என்னை தனி அறைக்கு கூட்டி சென்று, என்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றார். இந்த சம்பவங்களை புகார் மனுவாக எழுதி துறை இயக்குனருக்கு அனுப்பினேன். நேரிலும் முறையிட்டேன். இதையடுத்தே விசாகா கமிட்டி மூலம் விசாரணை நடைபெற்றது. நீதி கிடைக்கும்; தவறு செய்தவருக்கு தண்டனை கிடைக்கும் என நம்பி இருந்தேன். ஆனால், விசாரணை முடிவு அதிர்ச்சியளிக்கிறது. எப்படியும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் சந்திக்கவும் தயாராக உள்ளேன்’ என்றார்.