தேனி வேதபுரி சுவாமி சித்பவானந்தர் ஆசிரமத்தின் நிறுவனர் சுவாமி ஓங்காராநந்தா அவர்கள் முக்தி அடைந்த செய்தி நாம் அனைவரும் அறிந்ததே. அவருடைய மறைவு தமிழகத்தில் உள்ள ஆஸ்திகர்களுக்கும், தேச பக்தர்களுக்கும் ஒருபெரும் இழப்பாகும். சுவாமிஜி, 1956ம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கோவை மாவட்டம் பேரூரில் ஒரு வைதீக குடும்பத்தில் பிறந்தார். அவரின் தந்தையார் ஒரு வேத பண்டிதர். இளம் வயதிலேயே தந்தையார் பேரூர் கோயிலில் சுவாமி சந்நிதியில் ருத்ரம் செல்வதைக் கேட்டு படித்தார். முறைப்படி பாடசாலைகளில் வேதம் கற்றுக் கொண்டார்.
அவருடைய ஆன்மிகத் தேடலின் அடிப்படையில் சுவாமி சித்பவானந்தரை குருவாக ஏற்றுக்கொண்டு திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தில் பிரம்மச்சாரியாக சேர்ந்தார். 1985ல் ஓங்காரநந்தா என்ற நாமத்துடன் அவருடைய துறவற வாழ்க்கை ஆரம்பித்தது.சுவாமிஜி ஸம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் ஞானம் பெற்றவர். அவர் சுவாமி சின்மயானந்தரின் சிஷ்யரான ஆனைக்கட்டி சுவாமி தயானந்த சரஸ்வதி, சுவாமி பரமார்த்தானந்தர் ஆகியோரிடம் வேதாந்த சாஸ்திரங்களை நன்கு கற்றுக் கொண்டார். திருக்குறளையும், பாரதியார் பாடல்களையும் சிறுவயதிலேயே கற்றிருந்த அவர், திருக்குறளுக்கு வேதாந்த தத்துவங்களையும் விளக்கங்களையும் கொடுத்து திருக்குறள் தியானம் என்கிற ஒரு நூலை வெளியிட்டார். அதன் மூலம், வேதத்தைப் பற்றிய தெளிவான விளக்கங்களை திருக்குறள் மூலம் மிக எளிமையாக புரிய வைத்தார்.
சுவாமிஜியும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் சுவாமிஜி அவர்கள் சுவாமி சித்பவானந்தரின் சீடரானது முதலே சங்கத்தின் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். சுவாமி சித்பவானந்தரைப் போலவே, சங்க நிகழ்ச்சிகளுக்கு எப்பொழுதும் முன்னுரிமை அளித்தார். அதன் காரணமாக, எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் தவறாமல் கலந்து கொண்டு சங்க ஸ்வயம்சேவகர்கள் மிகச் சிறந்ததோர் வழிகாட்டினார். 1999 விருதுநகர் சங்க முகாமில் சிறப்புரையாற்றிய சுவாமிஜி, ”இளைஞர்களே நீங்கள் பாக்கியவான்கள்” என்று தனது குருநாதர் சுவாமி சித்பவானந்தர் சொன்ன கருத்துக்கு மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்தார். ”சங்க பிரசாரகர்கள் தேசத்திற்காக உழைக்கின்ற துறவிகள்” என்று கூறுவார். முகாம்களில் வந்து பல விஷயங்கள் கற்றுக் கொடுத்தார்.
சங்கத்தில் இன்று நிகழ்ச்சிகளுக்கு முன் பாடக்கூடிய “அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி” என்கிற பாரதியார் பாடலை அறிமுகம் செய்து வைத்தவர். குருஜி நூற்றாண்டு விழா நேரத்தில் மதுரையில் நடந்த மூன்று நாள் முகாமின் துவக்க நிகழ்ச்சியில், மூத்த பிரச்சாரகர்கள் சூரி ஜி, ரங்க ஹரி ஜி ஆகியோருடன் கலந்து கொண்டு ஸ்ரீ குருஜியின் பெருமைகளையும் ஹிந்து தர்மத்தின் பெருமைகளையும் ஸ்வயம்சேவகர்களுக்கு விளக்கிச் சொன்னார். அவருடைய ஆசிரமத்தில் சங்க நிகழ்ச்சி நடத்துவதற்கு எப்போதும் இடமளித்து வந்தார். அவருடன் தொடர்புக்கு வரும் எல்லா தரத்திலான மக்களையும் உயர்நிலைக்கு கொண்டு செல்வதற்கு முழு முயற்சி எடுத்தார்.
உசிலம்பட்டி எழுமலையில் ஒரு சாதாரண கொத்தனார். தொழில் செய்யக்கூடிய ஒருவரை திருக்குறள் முழுவதும் படிக்க வைத்து அதில் விளக்கவுரையும் கொடுக்க தயார்படுத்தினார். அவரையே அங்குள்ள கல்லூரிக்கு நிர்வாகியாக அமர்த்தினார். சிருங்கேரி மட ஆச்சாரியர்கள், இவருக்கு வேண்டிய அறிவுரைகளும் உதவிகளும் கொடுத்து நன்கு பணியாற்ற உதவினார்கள். ஆகையினால் சிருங்கேரி மடத்தின் பக்தர்கள் இவருக்கும் பக்தர்கள் ஆனார்கள். அதேபோல், புதுக்கோட்டை புவனேஸ்வரி அவதூத் வித்யா பீடத்திற்கும் பீடாதிபதியாக ஆனார். ராமகிருஷ்ணர் பரம்பரையைச் சேர்ந்த தொண்டர்களும் இவருக்கு சிஷ்யர்கள் ஆனார்கள்.
ஆகையினால் சங்கரர், தத்தாத்ரேயர், ராமகிருஷ்ணர் ஆகிய 3 மகான்களின் அருளும் ஞானமும் பெற்று, திரிவேணி சங்கமமாக மக்களை ஆன்மிக வெள்ளத்தில் ஆனந்தமடையச் செய்தார் பூஜ்ய ஸ்ரீ ஓங்காரநந்தா. இன்று சுவாமிஜியினுடைய பூதவுடல் மறைந்தாலும் அவர் விட்டுச்சென்ற, கற்றுக்கொடுத்த எல்லா விஷயங்களும் இவ்வுலகம் உள்ளவரை நம் அனைவருக்கும் நல்வழிகாட்டுதலாக அமையும். அவர் விட்டுச் சென்ற பணியை சிரமேற்கொண்டு ஏற்று நடத்துவதுதான் நாம் அவருக்கு செலுத்தும் ஆத்மார்த்தமான அஞ்சலி.
கட்டுரையாளர் : அகில பாரத இணை பொதுச்செயலாளர், விஸ்வ ஹிந்து பரிஷத்