அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கோயில் கட்டும் பணி வெகுவேகமாக நடைபெற்று வருகிறது. இக்கோயிலின் கட்டுமானப் பணியில் பயன்படுத்துவதற்காக, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் விஜய் ஜாலி நடத்தும் டெல்லி கல்வி வட்டம் என்ற தொண்டு அமைப்பு 115 நாடுகளில் ஓடும் நதி, கடல்களின் நீரை வரவழைத்துள்ளது. இந்த நீர் உள்ள குடுவைகள் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டன. ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அமைப்பின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், பல நாடுகளின் தூதர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது பேசிய ராஜ்நாத் சிங், ‘வசுதைவ குடும்பகம்’ எனப்படும் உலகமே ஒரு குடும்பம் என்பதை நம் தேசம் உறுதியாக நம்புகிறது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் இந்த யோசனையை செயல்படுத்தியதற்கு பாராட்டுகள். கோயில் கட்டுமானம் முடிவதற்குள் உலகில் மீதமுள்ள 77 நாடுகளில் இருந்தும் நீரை கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும். ஸ்ரீராமருக்கான கோயில் என்பது நம் நாட்டில் வாழும் அனைவரும் பெருமைப்படும் விஷயம். ஜாதி, மதம், மாநிலம் என்ற பாகுபாடுகள் இல்லாமல் இருப்பதே நம் நாட்டின் பாரம்பரியம்’ என்று கூறினார்.