உத்தர பிரதேசம், காஜியாபாத்தில் அப்துல் சமத் என்பவரிடமிருந்து தாயத்துக்களை வாங்கி ஏமாந்த வாடிக்கையாளர்கள் அவரை தாக்கினர். இவ்வழக்கை, ‘ஜெய் ஸ்ரீராம்’ என கூற சொல்லி அடித்ததாக மாற்றிக்கூறி சமூக மோதலுக்கு வழி வகுத்த வழக்கில், இதுவரை 9 பேரை உ.பி காவல்துறை கைது செய்துள்ளது. இதில் பொய்யாக புகார் கடிதம், வீடியோ தயாரிக்க உதவியதாக கைது செய்யப்பட்ட சமாஜ்வாடி கட்சித்தலைவர் உமேத் பஹல்வான் இத்ரிஸ், நடைபெற உள்ள உ.பி தேர்தலில் போட்டியிட, தனது கட்சியில் சீட் பெற வேண்டி இப்படி செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும், அரசியலில் ஈடுபடுவதற்கு முன் இவர் தனது சொந்த ஊரான பில்குவாவில் ஒரு திருடனாக இருந்தவர் என்பதும் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. முன்னதாக, இந்த வீடியோவையும் செய்தியையும் ஆராயாமல் பரப்பிய டுவிட்டர், தி வயர் உள்ளிட்ட ஊடகங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக டுவிட்டர் நிறுவனத்துக்கு அனுப்பிய நோட்டீசுக்கு முறையான பதிலை டுவிட்டர் அளிக்காததால் மீண்டும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.