காங்கிரஸ் மூத்த தலைவரும் காஷ்மீர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவருமான கரண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரரசர் ராஜராஜ சோழன் ஹிந்து மன்னர் கிடையாது என்று கருத்துகள் வெளியாகி வருவது வியப்பளிக்கிறது, வேடிக்கையாக இருக்கிறது. சிவபெருமான் ஆதி ஹிந்து கடவுள். காஷ்மீரின் ஸ்ரீநகர் முதல் தமிழகத்தின் ராமேசுவரம் வரை கோடிக்கணக்கான மக்கள் அவரை வழிபடுகின்றனர். பேரரசர் ராஜ ராஜ சோழன் தஞ்சையில் பிரம்மாண்ட பிரகதீஸ்வரர் கோயிலை கட்டியவர். அந்த கோயில் இன்றளவும் கட்டிட கலையின் அதிசயமாகப் போற்றப்படுகிறது. அவர் சைவ மதத்தை சேர்ந்தவர், ஹிந்து மதத்தை சேர்ந்தவர் கிடையாது என்று கூறுவது அபத்தமானது. அதாவது, ஒருவர் கத்தோலிக்கர், ஆனால் கிறிஸ்தவர் கிடையாது என்று கூறுவதுபோல உள்ளது இது. ஹிந்து மதத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஹிந்து என்ற வார்த்தை பிற்காலத்தில் உருவாகி இருக்கலாம். ஆனால் சிவன், விஷ்ணு, அனுமன், விநாயகர், மகாலட்சுமி, மஹா காளி கடவுள்களை பல நூற்றாண்டு காலமாக நாம் வழிபட்டு வருகிறோம். சைவம், வைணவம், சக்தி என்ற பெயர்களில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது. மூன்றுமே ஹிந்து மதம்தான்” என்று கூறியுள்ளார்.