ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் முன்னாள் அகிலபாரத பொதுச்செயலாளரும் தற்போதைய அகில பாரத செயற்குழு உறுப்பினருமான சுரேஷ் பையாஜி ஜோஷி, டெல்லியில் ஒரு கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், “நான் ஒரு ஹிந்து என்றால், ஹிந்துத்துவா என்பது எனது குணத்தைக் குறிக்கிறது. எனவே ‘ஹிந்து’ ‘ஹிந்துத்வா’ இரண்டும் வெவ்வேறு கருத்துக்கள் அல்ல. அவை இரண்டும் ஒன்றுதான். இதுகுறித்து தவறான கருத்தை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அறிக்கையை சரி என்று நினைப்பவர்கள் அதை நிராகரிக்க வேறு எந்த காரணத்தையும் கூற முடியாது. இந்த இரண்டு விஷயங்களும் வேறுபட்டவை என்று அவர் (ராகுல் காந்தி) கூறினார். சிலர் இந்த விஷயத்தைப் பற்றி வதந்திகளைப் பரப்புவதில் மும்முரமாக உள்ளனர். சர்ச்சைகளைத் தூண்டுவதில் பிஸியாக இருப்பவர்கள் வதந்திகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள்” என்று கூறினார். முன்னதாக கடந்த டிசம்பர் 18ல், காங்கிரஸ் தலைவர் ராகுல், ‘ஹிந்துத்துவாவாதி கங்கையில் மட்டுமே குளிப்பார். ஆனால் உண்மையான ஹிந்து, மக்களுடன் சங்கமிப்பார்’ என்று ஹிந்து மற்றும் ஹிந்துத்துவவாதிகளுக்கு இடையேயான வேறுபாடு குறித்து தனது அறிவுக்கு எட்டிய வகையில் பேசினார். இது சமூக ஊடகங்களில் பெரிதும் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.